பிரணவ் ஜூவல்லரி கடையில் 11 கிலோ நகை, ரூ.23 1/2 லட்சம் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி மற் றும் சென்னை உள்பட 8 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. இந்த நகைக்கடையில் பொது மக்களிடம் இருந்து முதலீட்டுத் தொகை பெற்று ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினார். இந்த நகைக்கடையின் உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து பிரணவ் நகைக்கடை மீது முறைகேடான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை தொடர்பான 11 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகளும், ரூ.23.70 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.