திருச்சியில் விநாயகர் கோவில் மேற்கூரையில் சிக்கி தவித்த 7 அடி நீள சாரை பாம்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த இடையப்பட்டியான்பட்டியில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் இன்று மதியம் 7 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. ஆலயத்தில் புகுந்த பாம்பு அங்கிருந்த மூலவர் விநாயகர் சிலையின் மேல் இருந்த கலசத்தின் மீது ஏறி வட்டமிட்டு படுத்துக்கொண்டது.
சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக கலசத்தில் இருந்த பாம்பு பொதுமக்களின் வருகையால் அச்சம் கொண்டு அங்கிருந்த மேற்கூரைக்கு சென்றது. மேற்கூரையில் இருந்த இரும்பு கம்பிகளில் வளைந்து வளைந்து சென்ற பாம்பு ஒரு இடத்தில் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டது. அதனால் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தது.
அதனைத்தொடர்ந்து தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்புத்துறை வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவிகள் மூலம் பாம்பினை நல்ல முறையில் பிடித்து ஆலயத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பாம்பினை உரிய பையில் எடுத்து செல்ல காத்திருந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்களின் கருவிகளிலிருந்து விடுபட்டு பாம்பு ஓட தொடங்கியது.
சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த இளைஞர்கள் பாம்பினை பிடித்து கருவிக்குள் கொண்டு வந்தனர். பின் மீண்டும் பாம்பு கருவிகளிருந்து தப்பிக்க முயன்றது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு சாக்கு ஒன்றில் அடைக்கப்பட்ட பாம்பு, அருகில் இருந்த வனப்பகுதி கொண்டு சென்று விடப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO