ரயில்கள் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் நின்ற சரக்கு வேன்

ரயில்கள் வந்தபோது திடீரென தண்டவாளத்தில் நின்ற சரக்கு வேன்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ரயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. நேற்று (18.06.2023) மாலை மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேஜாஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் ஒன்று வருவதற்காக அந்த கேட்டை மூடும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்தார். ரெயில் சற்று தொலைவில் வந்து விட்டதை அடுத்து அந்த கேட்டை மூடி விட்டார்.

அப்போது வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று இரண்டு கேட்டுகளுக்கும் நடுவில் வந்து தண்டவாளத்தில் பழுதாகி நின்று கொண்டது. தேஜாஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் வரும் நேரத்தில் சரக்கு வேன் நின்று கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் அங்கு வந்த சரக்கு ரெயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அங்கு வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து தண்டவாளத்தில் நின்று கொண்ட சரக்கு வேனை உடனடியான அப்புறப்படுத்தினர்.

பின்னர் அந்த வழியாக வந்த தேஜாஸ் ரெயில் தடையின்றி சென்று விட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் சரக்கு ரெயிலும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெயில் வரும் நேரத்தில் சரக்கு வேனை உள்ளே ஒட்டி வந்ததற்கு அபராதம் விதித்தனர்.

உரிய நேரத்தில் சரக்கு வேன் அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது.