தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குள் நாய் விடும் போராட்டத்தால் பரபரப்பு

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குள் நாய் விடும் போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாநகரில், தில்லைநகர், உறையூர், புத்தூர், பீமநகர், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புத்தூர் பகுதியில் வசித்து வந்த பெண்ணை நாய் கடித்ததில் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதேபோன்று உறையூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை நாய் கடித்ததில் கை, கால்கள் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் 31.12.2018 அன்று 90 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 57வது வார்டு உறையூர் கோணக்கரை சாலையில் உள்ள மின் மயான வளாகத்தினுள் தெரு நாய்கள் கருத்தடை மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களை கடித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தடுத்திட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தினுள் நாய் விடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நாய்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நாய் விடும் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் மாநகராட்சி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகராட்சி ஆணையரிடம் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காவல்துறையினர் அனுமதி மீறி கட்டாயம் நாய் விடும் போராட்டம் நடைபெறும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW