அதிமுக ஊர்வலம் - மனு - மாநகர ஆணையர் அலுவலக கதவு மூடல்

அதிமுக ஊர்வலம் - மனு - மாநகர ஆணையர் அலுவலக கதவு மூடல்

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பன்னீர்செல்வம் சார்பில் வருகின்ற திங்கள்கிழமை 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், அதிமுக கொடிகளையும், கட்சி சின்னத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை பன்னீர்செல்வம் தரப்பில் பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இதனை பொருட்படுத்தாமல், பன்னீர் சார்பில் நிகழ்ச்சியில் அதிமுகவின் பெயர் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதை கண்டித்தும்,

அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில், திராளான அதிமுகவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்பி-க்கள் ரத்தினவேல், சிவபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டடோர் வந்தனர்.

அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதை கண்டிக்கத்தக்கது.

இதன் மூலம் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர், பொது மக்களையும் அதிமுகவினரையும் குழப்பும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும், குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிமுகவிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு ஆகியவற்றின்படி வழக்குப்பதிந்து இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்சி முன்னாள் எம்.பி.குமார்... அ.தி.மு.க., பொதுக்குழுவில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வமும், அவருடன் சேர்ந்தவர்களும் சட்டத்திற்குபுறம்பாக அதிமுக சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்து கின்றனர். மேலும், பன்னீர்செல்வத்தின் சமூக வலைதள பக்கத்திலும் ஒருங்கிணைப்பாளர் என்று உள்ளது. இது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில், அதிமுக பெயர், சின்னம் மற்றும் கொடி போன்றவற்றை பயன்படுத்தும் உரிமை இல்லை. மீறி பயன்படுத்தினால், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், சட்டத்தை மீறி பயன்படுத்தினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn