15 ஆண்டுகளாக மோசமான சாலை - சாக்கு போக்கு சொல்லும் ஊராட்சி நிர்வாகம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், சா.அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது தெற்கியூர். இக்கிராமம் வழியாக அக்கரைப்பட்டி சாய் பாபா கோயில், தேவிமங்கலம், கீழுர், தெற்குமேடு போன்ற கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை ஒன்று உள்ளது. இங்குள்ள சாலை சுமார் 200 மீ. நீள அளவிற்கு அதிகளவில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதையறியாது செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி தடுமாறி செல்லும் அவலநிலையில் உள்ளது. சில நேரங்களில் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் குளம்போல மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி அவை கடிப்பதால் மக்கள் காய்ச்சல் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அவதிக்குளாகுகின்றனர். மேலும் இந்த சாலையில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள மழை நீரால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. எனவே மழைநீர் தேங்காதபடி குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் ஊராட்சி நிர்வாகத்திற்கு மனுக்கள் மற்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் போதிய நிதியிலாதால் தற்பொழுது புதிய சாலை மற்றும் தற்காலிக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகளின் நலனின் அக்கறை கொண்டு உடனடியாக 15 ஆண்டுகளாக சரி செய்யாத சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision