முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வயலூர் முறையான அனுமதி பெற்று திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளதா?
திருச்சி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் பிரசிதிபெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாக புகழ்பெற்றுள்ளது.
இக்கோயில் திருமணம் நடைபெற்றால் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் பெரும்பாலானோர் இக்கோயிலில் திருமணம் செய்து கொள்ள விரும்புவர். இதனால் முகூர்த்த நாட்களில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இதனால் வயலூர் பகுதி முழுவதும் குடியிருப்புகளை விட திருமண மண்டபங்கள் அதிக அளவில் உள்ளன. இது மட்டுமின்றி திருமணத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் வயலூர் முருகனை வழிபட்டு செல்வது வழக்கம்.
குறிப்பாக சோமரசன் பேட்டையில் இருந்து வயலூர் நுழைவாயில் வரை சாலைகள் அகலமாக உள்ளது. அதன் பின் வயலூர் நுழைவாயில் இருந்து கோயில் வரை குறுகிய சாலைகள் உள்ளன. இதனால் திருமண மண்டபம் மற்றும் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் போட்டி போட்டு கொண்டு செல்வதாலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி திருமணத்திற்கு வரக்கூடிய மக்கள் வாகனங்களை திருமண மண்டபம் வளாகம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்துவதில்லை.
மேலும் திருமண மண்டபங்கள் சிலவற்றில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் முகூர்த்தம் தினமாக இன்று வயலூர் பகுதியில் அதிகமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருமண மண்டபங்களுக்கு வருகை புரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயிலுக்கு வருபவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தற்பொழுது போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூர் வரை உள்ள 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம் கார்களும் நின்று கொண்டிருந்நன. இரண்டு மணி நேரமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காவல்துறையினர் யாரும் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். முகூர்த்தம் தினம் மற்றும் விழா காலங்களில் இது போன்ற போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
வயலூர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் போதுமான வாகன நிறுத்துமிடம் உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் அதேபோல் இனி வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு தற்காலிக அல்லது நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision