அமைச்சர்களை அலறவிடும் நீதிமன்றங்கள்!!

அமைச்சர்களை அலறவிடும் நீதிமன்றங்கள்!!

விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்கள்.

இரண்டாவது சாட்சியான, அப்போதைய பூத்துறை கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற விஜயகுமாரன் "எப்போது, எதற்காக அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டேன் என தெரியவில்லை," என, பிறழ் சாட்சியம் அளித்தார். பின்னர், மற்ற சாட்சிகளிடம் விசாரணை செய்ய வழக்கு விசாரணையை வரும். 29ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்த நிலையில், தற்பொழுது சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதேபோல, 2006–11ம் ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரு வழக்குகளும் நாளை காலை முதல் மற்றும் இரண்டாவது வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள் அது அந்த காலம் போல இனி வழக்குகள் சூடுபிடிக்கத்தொடங்கும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில், ஏற்கனவே செந்தில்பாலாஜி புழுல் சிறையில் இருக்க, தற்பொழுது பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் என இனிஷியல் போல பட்டியலும் நீண்டு கொண்டே போகும் போல !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision