திருச்சியில் பிரதமர் வந்து இறங்க தனி ஹெலிகாப்டர் தளம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
நாளை (19.01.2024) மாலை 05:00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு பகுதிக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சென்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
இதனையடுத்து நாளை மறுநாள் (20.01.2024) தேதி காலை 9:30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடக் கரையோரமாக உள்ள யாத்திரிகர் நிவாஸ் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்குகிறார்.
பிரதமர் மோடி காலை 11:00 மணியளவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சுவாமி தரிசனம் செய்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் கோயிலில் இருக்கும் பிரதமர் மோடி, கோயில் பகுதிகளை பார்வையிட்டு உழவாரப் பணிகளையும் மேற்கொள்கிறார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று கடலில் இறங்கி நீராட உள்ளார். இதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ஓரமாக யாத்திரிநிவாஸ் எதிர்ப்புறம் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஸ்ரீரங்கம் 4 மாட வீதிகளிலும் உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனைகள் நடத்தி குடியிருப்பவருடைய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது மட்டுமின்றி ஸ்ரீரங்கம் முழுவதும் தற்பொழுது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சாமி தரிசனம் செய்ய வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision