திருச்சி காவிரி ஆற்றில் அம்மாயி தாத்தா வழிபாடு

திருச்சி காவிரி ஆற்றில் அம்மாயி தாத்தா வழிபாடு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வரதராஜபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் அம்மாயி தாத்தா அழைத்து சாமி கும்பிடும் நூதன வழிபாடு நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று நடைபெறும் அம்மாயி தாத்தா நிகழ்ச்சியை முன்னிட்டு 12 வயதிற்குட்பட்ட 3 சிறுமிகள் தேர்வு செய்யப்படுவர்.

 அந்த சிறுமிகள் மாரியம்மன் கோவிலில் விரதம் மேற்கொண்டு வந்தனர். நேற்று அந்த மூன்று சிறுமிகளையும், மேளதாளங்கள் முழங்க புத்தாடை அணிவித்து தங்க நகை ஆபரணங்கள் அணிவித்து முளைப்பாரி, நெல் விதைகள் தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு அழைத்து வந்தனர்.

அங்கு மணலில் சுவாமி சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு தங்க நகைகள் அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கும்மியடித்து அம்மாயி தாத்தா மாரியம்மன் ஆகிய தெய்வங்களை குலவையிட்டு பாட்டு பாடி அழைத்தனர். அப்போது சிறுமிகளுக்கு ஆவேசம் வந்து அருள் வந்து ஆடினர். அப்போது பூசாரி தட்டில் எழுதி சுருட்டி வைக்கப்பட்டிருந்த காகிதங்களை சிறுமிகள் முன்பு நீட்டினார்.

சிறுமிகள் அதிலிருந்து தாங்கள் வந்திருப்பது யார் என்பதை கூறி மக்களுக்கு அருள்வாக்கு கூறினர். அப்போது ஊரில் நன்கு மழை பெய்து விவசாயத்தை செழிக்க வைத்து, மக்களை நோய் நொடி இல்லாமல் பாதுகாத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது.

பின்னர் பொதுமக்கள் தாங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு வந்திருந்த கட்டு சாதங்களை உறவினர்கள் நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். வருடந்தோறும் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி உலக நன்மைக்காக இயற்கையோடு இணைந்து பிரார்த்தனை செய்யும் கிராம மக்களை வெளியூரில் இருந்து வந்திருந்த உறவினர்கள் பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision