"பெண்களுக்கான தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள்" - ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
திருச்சி புனித சிலுவை கல்லூரியில், பொருளாதார துறை சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள்" என்னும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரியில் நடைப்பெற்றது.
தொடக்க நிகழ்ச்சியில், பொருளாதாரத்துறைத்தலைவர் முனைவர். யசோதா ஜெகதீஸ்வரி, வரவேற்புரை வழங்கினார், கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் ஆனி சேவியர் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர், அருட்சகோதரி முனைவர் இசபெல்லா ராஜகுமாரி தலைமையுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்க உரையை, புது டெல்லியில் உள்ள பெண்கள் வளர்ச்சி மைய இயக்குனர் பேராசிரியர் முனைவர் மணிமேகலை வழங்கினார். தனது உரையில், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பாலின வேறுபாடு காரணமாகவே மகளிர் வேலை வாய்ப்பில் பங்கு பெறும் சதவீதம் குறைவாக உள்ளதாக கூறினார். எனவே கல்லூரி மாணவிகள் தங்கள் படிப்பை ஆராய்ச்சி படிப்பு வரை தொடரவேண்டும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையை திருச்சி வர்த்தக மையத்தின் தலைவர் திரு. கனகசபாபதி வழங்கினார். அவர் தன் உரையில் மாணவர்கள் படிக்கும் போதே லட்சியத்தோடு படிக்க வேண்டும் எனவும், கல்லூரியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று தம் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
கருத்தரங்கின் முதலாம் அமர்வில், பெரம்பலூர், ஆர்.எ ஃபுட்ஸ் (RA Foods) நிர்வாக இயக்குனர் பிரியா குணசேகர் பேசுகையில்..... உண்மையான தொழில் முனைவு என்பது தோல்விகளை நெறிப்படுத்தி அதனை சரியான திசையில் நடத்தும் வல்லமையே ஆகும் என்றார். மேலும் தொழில்முனைவோராக தனது அனுபவங்களை மாணவிகளோடு பகிர்ந்து கொண்டார். திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், செந்தில்குமார் DIC வழங்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினார். தற்போது புதிய தொழில் தொடங்கும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பெண்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அரசு கொடுக்கிறது எனவும் கூறி, மாணவிகள் வேலை செய்பவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision