மோசடி விவகாரம் - திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது

மோசடி விவகாரம் - திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்கிற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த எல்பின் நிறுவனத்தின் கீழ் அறம் மக்கள் இயக்கம், அறம் டிவி உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

தமிழ்நாடு முழுவதும் பணம் இரட்டிப்பு, பல்வேறு வகையான பொருள்கள் வழங்கல், வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்சிகரமான திட்டங்களை அறிவித்து எல்பின் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி அந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர்.

அவ்வாறு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாக பல முறை அந்த நிறுவனத்தின் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்தனர். அதேபோல முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என ஜி எஸ் டி அதிகாரிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்தனர். தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவின் படி எல்ஃபின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் யார் யார்? மக்களிடம் பணத்தை ஏமாற்ற காரணம் யார் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். அதனடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை தொழிலாளர் முன்னனியின் மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn