நல்ல நாள் பார்த்து ஆயுத பூஜையில் பேட்டரி திருட முயன்ற கும்பல் - கைது சுவாரஸ்யம்

நல்ல நாள் பார்த்து ஆயுத பூஜையில் பேட்டரி திருட முயன்ற கும்பல் - கைது சுவாரஸ்யம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த பேட்டரியை திருடுவதற்கு சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பி. கே. அகரம் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு செல்போன் டவர் அமைந்துள்ளது. இந்த 2 டவரிலும் 6 பேட்டரிகள் உள்ளது. ஒரு பேட்டரியின் மதிப்பு ரூ. 2.5 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடுவதற்க்காக சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேட்டரிகளை திருட முயன்றனர். இதில் 3 பேட்டரிகளை கழற்றி வெளியே எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அதிலிருந்த  ஒலிக்கும் அபாயமணி சத்தம் தனியார் செல்போன் டவர் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து செல்போன் டவர் நிர்வாகிகள் சிறுகனூர்  போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்திற்க்கு சென்றனர். மேலும் திருச்சி சென்னை தேசிய நெடுச்சாலையில்  ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும் சம்பவ இடத்திற்க்கு வந்தனர். போலீசார் மற்றும் செல்போன் டவர் நிர்வாகிகளை கண்டதும் மர்ம நபர்கள் வாகனத்தை  விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்க்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் திருட்டு குறித்து ஆய்வு செய்து வாகனத்தை பறிமுதல்

செய்து தப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்து வந்தார். ஏற்கெனவே  இந்த செல்போன் டவரில் மரம் நபர்கள் 6 முறை திருடிச் சென்றுள்ளனர். 7 வது முறையாக திருட முயன்ற போது அலாரம் மணி ஒலித்ததால் சம்பவ இடத்திற்கு  வந்த போலீசாரைக் கண்டதும் தப்பிச் சென்றனர். வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் திருடி வந்த மர்ம நபர்கள் இந்தமுறை முன்னேற்பாடாக ஆயுதபூஜைக்கு திருட முயன்று போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தனியார் செல்போன் நிறுவனத்தின் பணியாளர் ஊட்டத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேஷ்குமார் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதனை தொடர்ந்து லால்குடி டிஎஸ்பி அஐய்தங்கம் தலைமையில் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி, முதல்நிலை காவலர் மணிகண்டன், காவலர்கள் ரமேஷ், பிரேம் ஆனந்த் உள்ளிட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் பிரிவு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்க்கிடமான இருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்த மணிகண்டன் (34) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சசி (29), கருப்பாயி (34) மற்றும் தமிழரசி (34) என ஒரு ஆண் உட்பட 3 பெண்கள் என 4 பேர் செல்போன் டவரில் இருந்த பேட்டரிகளை திருட முயன்றது தெரிய வந்தது. இதில் பெண்கள் அனைவரும் தூய்மை பணியாளராக பணி புரிந்து வந்துள்ளனர்.

மேலும் விசாரணையில் இவர்கள் பல்வேறு இடங்களில் பேட்டரிகளை குறிவைத்து திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. பேட்டரிகளை திருட முயன்று தப்பியோடிய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்த  சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. பின்னர் இவர்கள் 4 பேர் பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision