அகலக்கால் வைக்கிறாரா அண்ணாமலை? தமிழகத்தில் கரைசேருமா தாமரை?
அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி முறிந்ததா இல்லையா என்ற சர்ச்சை ஒருபுறம் தொடர்ந்துகொண்டிருக்க எங்கு பார்த்தாலும் அண்ணாமலை குறித்த விமர்சனங்களே வலம் வந்துகொண்டு இருக்கின்றன. பாரதிய ஜனதாவின் தமிழ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலை தொடர்பான சர்ச்சைகள் எழத் தொடங்கிவிட்டன. பத்திரிகையாளர்களுடன் மோதல், கட்சியில் சீனியர்களை மதிக்காதது, பிற கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சிப்பது எனப் பல்வேறு சர்ச்சைகள் உருவானபோதிலும் கட்சியின் தேசியத் தலைமை எதையும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கட்சிக்குள்ளேயே அண்ணாமலை எதிர்ப்பு அணி ஒன்றும் உருவானது. இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் தனது பாணியிலேயே அரசியல் செய்துகொண்டிருந்த அண்ணாமலை, ஆட்டக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனையே கடித்த கதையாக தங்கள் கூட்டணிக் கட்சியான அதிமுகவையே பதம் பார்க்க ஆரம்பித்தார். பனிப்போராக உருவெடுத்து பின்னர் எரிமலையாக மாறிய இந்த விவகாரம் இரு கட்சிகளுக்கிடையேயான உறவைப் பொசுக்கியது. இது தமிழக பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு உதவும் என ஒரு தரப்பினரும், அழிவுக்கே வித்திடும் என மறுதரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக போன்ற கட்சிகளுடன் புதிய தமிழகம், ஐஜேகே போன்ற உதிரிக் கட்சிகளையும் சேர்த்து கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவுடனான கூட்டணியையே டெல்லித் தலைமை விரும்புவதால் அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு எதிர்த்தரப்பு கூறுகிறது. அரசியலின் நெளிவு சுளிவுகள் தெரியாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செயல்பட்ட அண்ணாமலையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேசிய அளவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமையில்லை என விமர்சித்து வந்த பிரதமர் மோடிக்கு தனது கூட்டணியிலிருந்தே விலகுவதாக ஒரு கட்சி பகிரங்கமாக அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது கூட்டணியின் பிறகட்சிகளிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டணிக்கட்சிகளைச் சமாளிக்கவும் அதிமுகவைச் சமாதானப்படுத்தவும் கட்சியின் மூத்த தலைவர்கள் முயன்று வருவதாகத் தெரிகிறது. அப்படியே உறவு செப்பனிடப்பட்டாலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை தாமரைக்குச் சாதகமான சூழல் இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision