திருச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து (04.11.2023) சனிக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி சமயபுரம் டோல் பிளாசா அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அனைத்து அரசுத்துறை முன்னேற்பாடு கூட்டம் இன்று (30.10.2023) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியரக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாம் சிறப்புற நடைபெறும் வகையில் துறை வாரியாக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைகள் வழங்கினார்.

இம்மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 15,000க்கும் தனியார்துறை பணிக்காலியிடங்களை நிரப்பிட உள்ளனர். மேலும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 35 வயதுடைய பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர் மற்றும் பொறியியல் படித்த அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனவும்,

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் பல்வேறு அரசுப்பணிகளுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும், வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.