ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், ஸ்ரீ பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிலுக்கு பிற மாவட்டங்கள் மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில், 1 முதல் 7 வார்டுகளில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகள் அடங்கும். இப்பகுதியில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இது வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையங்கள் எதுவும் இல்லை.
ஸ்ரீரங்கத்திற்கு வரும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. அதனால், ஸ்ரீரங்கத்தில் உள்ளுர் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தேர்தலின் போது வாக்குறுதி அளித்து வந்தன. 2021ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு அமைச்சர் நேரு உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒருஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, ஸ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 2022-23ம் ஆண்டுக்கான மூலதன மானிய நிதி ரூ.7.77 கோடி, மாநகராட்சி பங்களிப்பு ரூ.3.33 கோடி என மொத்தம் ரூ.11.10 கோடியில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து டெண்டர் உள்ளிட்ட நடைமுறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision