ஒரு பக்கம் எதிர்ப்பு - மறுபுறம் திறப்பு தேதி அறிவிப்பு!
திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வழக்கறிஞர் மாரியப்பன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்.
பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது..... திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை நிறுவும் விஷயத்தில் சட்டப்படியான உரிய விதிமுறைகள் எதுவும் இதுவரை பின்பற்றப்படவில்லை. மாநகராட்சி தீர்மான அனுமதியோ, காவல்துறை அனுமதியோ எதுவும் முறையாக பெறப்படவில்லை.
திருச்சி மாநகரத்தில் குறிப்பாக கிழக்கு தொகுதியில் புதிதாக ஏராளமான தி.மு.க. கொடி கம்பங்கள் கல்வெட்டோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டால் அவைகளை அகற்றுவதோடு வைத்தவர்கள் மீது வழக்கு பதியும் நடைமுறையை காவல்துறை கடைபிடித்து வருகிறது.
விதிமுறைகளுக்கு புறம்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு சிலை அமைப்பதால் பேருந்து நிறுத்தம் என்பதாலும் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிர்காலத்தில் இடையூறு ஏற்படும் மேற்படி தலைவரின் பிறந்தநாள், நினைவு நாளின்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி விதிமுறைகளுக்கு புறம்பாக சிலை வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படியும், வேறு இடத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு பரிந்துரை செய்யும்படியும் வேண்டுகிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல் தமிழக அரசின் தலைமை செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சிமாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதும் சிலை திறப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வரும் முதல்வர் சிலையை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision