திருச்சியில் 29 பேரின் சரித்திர பதிவேடு திறப்பு - திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி
திருச்சி மாநகரில் ஜங்ஷன் மேம்பாலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலம் மன்னார்புரம், திண்டுக்கல் சாலை, ஜங்சன், கிராப்பட்டி, மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் வழிகளில் வாகனங்கள் ஏறுவதற்கு அல்லது இறங்குவதற்கு என ஒரு வழி பாதையாக தான் இருக்கிறது.
இந்நிலையில் அந்த பாலத்தில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இரு வழிப்பாதையாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா அந்த பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரு வழிப்பாதைக்கான முன்னோட்டம் இன்று விடப்பட்டதையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சத்தியபிரியா..... போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பாலத்தின் இரண்டு வழித்தடங்களில் மட்டும் இருவழிப் பாதையாக மாற்றுவதற்கு ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாளில் இது இருவழிப்பாதையாக மாற்றப்படும். சிறிய ரக வாகனங்கள் மட்டும் இருவழிப் பாதையில் அனுமதிக்கப்படும். திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் 1500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அந்த கேமராக்கள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தினம்தோறும் அதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையில் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தவிர கஞ்சா எங்கிருந்து வருகிறது எப்படி விற்பனை செய்யப்படுகிறது என சில இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த இடங்களில் தீவிர கண்காணிப்பானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதை பொருள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn