பலன் தருமா பன்னீர் பயணம் ! வாய்ஸ் கொடுப்பாரா படையப்பா !!

பலன் தருமா பன்னீர் பயணம் ! வாய்ஸ் கொடுப்பாரா படையப்பா !!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அவரது தோழி சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்த முதல்வர் பழனிசாமியுடன் 2017ல் கைகோர்த்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். ஆட்சியிலும் துணை முதல்வராக பதவி வகித்தார். 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததற்கு பிறகு, கட்சியில் ஒற்றைத் தலைமை கோஷம் தலைதுாக்கிய , அதற்கு பன்னீர் செல்வமும் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மோதல், 2022 ஜூலை 11ல் நடந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றும் வரை கொண்டு போனது. அதன்பிறகு நடந்த பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர் செல்வம் அணியினர் தொடர்ந்த வழக்கில் பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவை தந்தது.

இந்த தீர்ப்பு குறித்து, "நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறிய பன்னீர்செல்வம், மக்கள் மன்றத்தில் நிரூபிப்பார்' என்று அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து உதிர்க்க, அதன்படி, மாவட்ட வாரியாக தொண்டர்களை சந்திக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் இருந்து புரட்சிப் பயணத்தை பன்னீர் செல்வம் தொடங்குகிறார். 
நாளை இதற்காக காஞ்சிபுரம் அருகே கலியனுாரில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பழனிசாமி காட்டிய பிரம்மாண்டத்துக்கு போட்டியாக காஞ்சிபுரத்தில் பன்னீர்செல்வம் கூட்டத்தை திரட்ட முடிவு செய்துள்ளார் எனக்கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வரும் பன்னீர்செல்வம் அணியினர், ''எம்ஜிஆர், ஜெயலலிதா புடவைகள் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தில் அடுத்த பொதுக் கூட்டம், தொண்டர்கள் சந்திக்கும் புரட்சி பயணம் எங்கு என்பது குறித்து பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்துக்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்களுக்கு பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளதால், 30 ஆயிரம் பேர் வருவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா பாதையில் பன்னீர்செல்வத்தின் புரட்சிப் பயண தொடக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.

 

பன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடை பெறுகிறது. நாடாளுமன்ற கட்டட வடிவமைப்பில் மேடை அமைக்கப்படுகிறது. மேடையில் இருந்து நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கும் வகையில் 500 மீட்டர் துாரத்திற்கு நடைமேடையும் அமைத்துள்ளார்களாம். 10 ஆயிரம் பேர் அமர்ந்து பொதுக்கூட்டத்தை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம், அனேகமாக அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் என பெயரை அறிவிப்பார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்நிலையில் எஞ்சியிருக்கும் முக்கிய பிரமுகர்களை கொத்தாக தூக்க பழனிச்சாமி அணியினர் முடிவெடுத்து இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதற்கிடையே நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் பன்னீர்செல்வம் ரஜினிகாந்தை சந்தித்துப்பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பன்னீர் செல்வத்துக்கு படையப்பா வாய்ஸ் கொடுப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருப்பது ஒருபுறம் இருக்க, தன்னுடைய அணிக்கு பாஜகவில் எப்படியாவது இடம் கிடைக்கச்செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைக்கவே போயஸ் கார்டன் சென்றதாக சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள் ஆனால் படையப்பாவோ கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக சிரித்து மழுப்பி அனுப்பிவிட்டாராம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision