கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் கோடை விடுமுறை சிறப்பு கலைப் பயிற்சி நிறைவு விழா
கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் ஓர் அங்கமான கலைக் காவிரி நுண்கலைப் பள்ளியின் கோடைவிடுமுறை சிறப்பு கலைப்பயிற்சி நிறைவு விழா அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுதில்லியைச் சேர்ந்த அருள்தந்தை ஜான் ரொசாரியோ தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் அருள்பணி. S.G.சாமிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு பரதம், குச்சுப்புடி, குரலிசை, கருவியிசை அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர்தம் சிறப்புரையில் கோடைவிடுமுறையில் தொடர் பயிற்சி பெற்று அரங்கேற்றம் நிகழ்த்திய மாணவர்கள் பகுதிநேரம் முழுநேரம் பயிலும் மாணவர்களைப் போலவே அவர்களுக்கு இணையாகக் கற்று சிறப்பாக அரங்கேற்றம் நிகழ்த்தியுள்ளனர். பெற்றோர்கள் அவர்களின் கலைசார் கனவுகளை தம் பிள்ளைகள் வாயிலாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த சிறார்கள், மாணவர்கள் வெளியே வருவதும் நேரடியாக கற்பதும் ஒன்றுகூடுவதும் பெருமகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
மற்ற கலை அறிவியல் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றுச் சென்று விடுவர், ஆனால் கலைக் காவிரியில் மட்டும்தான் ஆசிரியர், மாணவர், அவரின் மாணவர் என அடுத்தடுத்து வாழையடி வாழையாக கலைகளை தொடர்ந்து கற்றுத் தந்து மரபுக்கலைகளை உயிர்ப்போடு வளர்த்தெடுக்கிற முறை உள்ளது போற்றத்தக்கதாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வளர்ந்துவரும் இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் அறிவார்ந்த தலைமுறையாக உருவெடுத்துவருகின்றனர், யாவற்றையும் கேள்வி கேட்கிறார்கள், கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். ஆனால் நற்பண்புகளில் நற்செயல்களில் பின்தங்கி வருகின்றனர். நாள் முழுதும் இணைய அடிமைகளாய் மொபைல் போனிலும் சமூக வலை தளங்களிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்களின் மனதை, வாழ்வை, நடத்தையை சீர்செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மைக் கடமையாகும், நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். காலவரைமுறையின்றி வீடியோ கேம் விளையாட்டுகளில் மூழ்கி வாழ்வைத் தொலைத்து மனநோயாளிகளாய் சிறார்கள் அதிகரித்து வரும்போக்கு கவலையளிக்கிறது.
இத்தகைய நிலையில் கலையைக் கற்றுக்கொள்ள பிள்ளைகளை ஆற்றுப்படுத்துவது வரவேற்புக்குரியது. தொடர்ந்து இணைய அடிமைகளாய் பெருகும் சிறார்களின் மனதில் உருவாகிடும் வெறுப்புணர்வு, வன்மம், வன்முறை, வன்கோபம், தூக்கமின்மை ஆகியவற்றை குறைத்து பண்படுத்துவது கலைகளே. கலைகள் கற்பதன் வாயிலாக மாணவர்களுக்கு தனித்திறன் மட்டுமல்ல தன்னம்பிக்கை கூடுகிறது, கற்றல்திறன், கணிதத்திறன், ஆர்வம், உற்று நோக்கல், சேர்ந்து கற்பது, சேர்ந்து செயல்படுவது, சேர்ந்து நிகழ்த்துவது என மனிதப் பண்பு கள் வளர துணைபுரிகிறது. சமூகத்தில் சிறந்த ஆளுமையாக உருவாக கலைகளே அடிப்படையாக அமைகிறது. எனவே இத்தகைய கலைகளைக் கற்று அரங்கேற்றம் காணும் மாணவர்களை பெரிதும் பாராட்டுகிறேன் என்றார். தொடர்ந்து பரதம், குச்சுப்புடி, குரலிசை, கருவியிசை, மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்தும் ஆறுமாத பட்டயப் படிப்பு மாணவர்களின் பரதம் அரங்கேற்ற நிகழ்வு நடைபெற்றது.
தெடர்ந்து அருள்பணி.ஜான் ரொசாரியோ, மற்றும் கல்லூரியின் இயக்குநர் அருள்பணி.சாமிநாதன் அடிகள் வாழ்த்துரை வழங்கினர். வரவேற்புரையை இசை ஒருங்கிணைப்பாளர் அதிசய பரலோக ராஜ் ஆற்றினார். நடனத்துறை ஒருங்கிணைப்பாளர் பெனிட்டா நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO