சிறப்பு குழந்தைகள் கொண்டாடிய பொங்கல் விழா

சிறப்பு குழந்தைகள் கொண்டாடிய பொங்கல் விழா

தைப்பொங்கல் திருவிழா இன்று (12.01.2023) தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, தி டால்பின் சிறப்பு பள்ளி மற்றும் சீகல் சிறப்பு பள்ளி ஆகியவை இணைந்து தைப்பொங்கல் திருவிழாவை பள்ளி வளாகத்தில் நடத்தியது. அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கோ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ப.அர்ஜுன் மற்றும் சைன் திருச்சி நிறுவனர் மனோஜ் தர்மர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் இணைந்து பொங்கல் நிகழ்ச்சிகளை கொண்டாடி மகிழ்ந்தனர். சிறப்பு குழந்தைகளின் கை வண்ணத்தில் உருவான வண்ண படங்கள் காட்சிபடுத்தப்பட்டும் நமது பாரம்பரிய பண்பாட்டை எடுத்துக் கூறக்கூடிய பலவித கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மாணவர்கள் உருவாக்கிய அழகிய வீட்டு முன்பு ஆடுகள் மற்றும் கோழிகள் உடன் இணைந்து மாணவர்கள் கிராமிய சூழலில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் மாணவர்கள் மாட்டு வண்டியிலும் குதிரை வண்டியிலும் பள்ளி பகுதி ஒட்டியுள்ள தெருக்களை சுற்றி வந்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தனர். அது மட்டுமல்லாது மாணவர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் கம்பங்கூழ், பஜ்ஜி, போண்டா, வளையல், துணி, தஞ்சாவூர் பொம்மை, மூங்கில் கூடை, நாட்டுச் செடிகள், பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் ஆகிய கடை உள்ளிட்ட 25 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்பானையை உறியடித்து உடைத்து மகிழ்ந்தது மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. மாணவர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் மற்றும் தி டால்பின் சிறப்பு பள்ளி நிர்வாக இயக்குனர் பிரவீனா இணைந்து செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn