திருச்சியில் கொரோனா பரவல் தடுப்பு விதி மீறிய 875 பேர் மீது வழக்குப்பதிவு - காவல்துறை நடவடிக்கை

திருச்சியில் கொரோனா பரவல் தடுப்பு விதி மீறிய 875 பேர் மீது வழக்குப்பதிவு - காவல்துறை நடவடிக்கை

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய் தொற்று மெதுவாக அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு 31.07.2021 முதல் 09.08.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது. 


  திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக இன்று (04.08.2021) காவல் துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, திருச்சி மாநகரம் அவர்களின் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச்சாலை சந்திப்பு, மேலப்புதூர் சந்திப்பு மற்றும் காந்தி மார்க்கெட் சந்திப்பு ஆகிய சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு,முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 800-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத 75 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,ரூ.4,75,000/- (ரூபாய் நான்கு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.