பொதுமக்கள் மனு - மேயர் கள ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மேயர் மு.அன்பழகன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக மேயரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் மேயர், மாநகராட்சி அலுவலர்களுடன் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்களுடன் உரிய களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேற்று (05.02.2024) நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மண்டலம் - 4 வார்டு எண் : 8 க்கு உட்பட்ட உறையூர் பாத்திமா நகர் பகுதி பொதுமக்கள் சுகாதார வளாகம் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரியும் மனு அளித்திருந்தனர்.
அந்த கோரிக்கை மனு குறித்து இன்று (06.02.2024) மேயர் மு. அன்பழகன் நேரில் மண்டல தலைவர், உதவி ஆணையர், உதவி செயற் பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் நேரில் பார்வையிட்டு புதிதாக அமைக்கப்பட உள்ள சுகாதார வளாக இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் .
மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கும், இளநிலை பொறியாளருக்கும், பழுதடைந்த சுகாதார வளாகத்தை அகற்றிவிட்டு புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு விரைவில் ஒப்பந்தப்பள்ளி கோரி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சுகாதார வளாகத்தை கட்டி கொடுக்கவும் அதே பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர், வெங்கட்ராமன், உதவி செய்ய பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.