நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட ரவுடி ஜெகன் உடல் - போலீஸ் குவிப்பு

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட ரவுடி ஜெகன் உடல் - போலீஸ் குவிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் (38). இவருக்கு மனைவி ஒரு மகள் உள்ளனர். 12ம் வகுப்பு வரை படித்த ஜெகன், திருச்சி டோல்கேட், மணச்சநல்லூர், பாண்டிச்சேரி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் நேரடியாகவும், கூலிப்படையாகவும், 11 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.

மேலும் கூலிப்படையாக செயல்பட்டது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு, ரவுடி ஜெகன் சிறுகனூர் அருகே, சனமங்கலம் வனப்பகுதியில் பதுங்கி வன விலங்குகளை வேட்டையாடி கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில் தனிப்படை போலீசார், அந்தப்பகுதிக்கு சென்று ரவுடியை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் பிடிக்க முயன்ற போது, எஸ்.ஐ. வினோத் என்பவரை ரவுடி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார். உடனே, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டார்.

அதில், ரவுடி ஜெகன் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தார். போலீசார் அவரைப் பிடித்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் சுட்டதில் படுகாயமடைந்த, ரவுடி ஜெகன் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து திருச்சியில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு ரவுடி ஜெகன் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டு, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் சுடப்பட்டதில் உயிரிழந்த ரவுடி ஜெகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை ஜெகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட இருந்த நிலையில் அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெகனின் தந்தை, தாய் மற்றும் மனைவி தெரிவித்தனர். குறிப்பாக அவரது கை, கால்கள் முறிக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு கொன்றுவிட்டதாக நீதிபதியிடம் முறையிட்டனர். 

இதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெகனின் உடலை சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர் ஜெகனின் உடல் நீதிபதி முன்பு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அவருடைய உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு வைக்கப்பட்டது. இதற்கிடையில் அவரது பெற்றோர்கள் உடலை பெற்றுக்கொண்டேன் என கையொப்பமிடாமல், நீதிபதியிடம் முறையிட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு ரவுடி ஜெகனின் உடலை பெற்றுக் கொண்ட அவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற பின் ஓயாமரி மயானத்தில் அவரது உடலை தகனம் செய்ய உள்ளனர்.

ரவுடி ஜெகன் உடல் அரசு மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றபோது ரவுடி ஜெகனின் ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து வீடு வரையிலும் அந்த அமரர் உறுதி வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision