கொரோனா கால நிவாரணமாக ரூபாய் 2000 வழங்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை

கொரோனா கால நிவாரணமாக ரூபாய் 2000 வழங்க வேண்டும் - முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மேடை நாடகக் கலைஞருமான வீரத் தியாகி விஸ்வநாததாஸ் 135 ஆவது பிறந்த நாள் விழா சமூக நலச் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தலைவர் ஆர்.செல்வராஜ், செயலாளர் பி.தர்மலிங்கம், பொருளாளர் எம்.முருகேசன், ஆகியோர் தலைமையேற்றனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக விஸ்வநாத தாஸ் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது 

சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சக்தி அமைப்பைச் சார்ந்த வளர்மதி சிறப்புரை வழங்கினார். மேலும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி அமைப்பு மூலம் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களாக முக கவசம், கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டது. சேவாபாரதி தென்தமிழ்நாடு சாதனா அறக்கட்டளை மூலம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்சனிக் ஆல்பம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஓமியோபதி மருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர மாவட்ட மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் சில கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும், விஸ்வநாத தாஸ் வாழ்க்கை வரலாற்றினை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்குமாறும்  தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்ற ஆண்டு கொரோனா காலகட்டத்தில் முந்தைய அதிமுக அரசு முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிதியாக ரூபாய் 2000/- வழங்கியது. அதுபோல் இந்த புதிய திமுக அரசும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியினை அளித்திட வேண்டும்.

இந்த கொரோனா காலகட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தடுப்பூசி வழங்க  முன்னுரிமை வழங்கி மாவட்டம் தோறும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசிகளை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF