மணல் குவாரிகளை திறக்க வேண்டும் - மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்

மணல் குவாரிகளை திறக்க வேண்டும் - மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் அதிக எண்ணிக்கையிலான புதிய அரசு மணல் குவாரிகளை திறந்து இயக்கிட வேண்டும். இயங்கி வரும் அரசு மணல் கிடங்கில் மணல் தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கிட ஆற்றிலிருந்து மணல் விற்பனை கிடங்கிற்கு மணல் எடுத்து வந்து இருப்பு வைக்க சிறப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும்,

அரசு மணல் விற்பனை கிடங்கில் அதிகளவில் மணல் இருப்பு இருந்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள குன்னம், பாலூறான்படுகை, மங்களம், ஒரியூர், தளவாய்வடக்கு, கந்தனேரி ஆகிய விற்பனை கிடங்குகளை இயக்கிட வேண்டும்,

இணையதள பதிவில் (Online Booking) பொதுப்பயன்பாடு பிரிவு (Public Entry) பதிவு நேரத்தை குறைத்து லாரி பிரிவில் (Lorry Entry) பதிவு செய்ய அதிக நேரம் ஒதுக்க வேண்டும்,

அரசு மணல் கிடங்கில் மணல் எடுத்து வரும் லாரிகளை வழிமறுத்து ரூ.500 முதல் ரூ.1,000 வரை சிலர் அடாவடி வசூல் செய்கின்றனர். அதை காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தி லாரிகளுக்கும், ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மணல் குவாரிகளுக்கு தனியாக திட்ட இயக்குனரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் செல்ல.ராசாமணி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ள மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை செய்த பிறகு அந்த குவாரிகளை இயக்க அரசு ஆர்வம் காட்டவில்லை. மாறாக தனியார் எம்.சாண்ட் குவாரிகளை இயக்க தான் ஆர்வம் காட்டுகிறது அது தவறு. எனவே அமலாக்கத்துறை சோதனையால் செயல்படாமல் உள்ள குவாரிகளை மீண்டும் இயக்க வேண்டும், புதிய குவாரிகளையுன் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மணல் குவாரிகளில் 6 சக்கரம் மற்றும் 10 சக்கரம் கொண்ட லாரிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் தலைமை பொறியாளர் அலுவகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அதற்கு அனுமதி வழங்காததால் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அலுவலகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் நுழைவு வாயிலில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision