காவல் துறையில் ஏதோ பிரச்சனை திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

காவல் துறையில் ஏதோ பிரச்சனை திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகைதந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்... திருச்சியில் உள்ள பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தொழில் நிறுவனம். இந்நிறுவனத்தை சார்ந்து 500க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாக 30 ஆயிரம் பேர் பணி செய்யும் நிறுவனத்தின் மூலம் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தியை குறைத்து காட்டி, தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சி தவிர்த்து, கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள பெல் நிறுவனத்தை, அந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை வாங்கி, அதை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதே போல், தமிழக அரசும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கடந்த 2017ல், 350 கோடி ரூபாய் வரை  ஒதுக்கியும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. வரும் 17ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளது. இது சட்டத்திற்கும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், தமிழகத்திற்கும் எதிரான செயல். அந்தக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க, குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உடனடியாக நீதிமன்றம் மூலம், அந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது அந்த கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் உயிர் நாடியான காவிரியில், மேகதாது அணை கட்டினால், கடைமடை பாசனத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மேகதாது அணை கட்டினால் கர்நாடக அரசின் மொத்த நீர் கொள்ளளவு 210 டிஎம்சி ஆகிவிடும். தமிழகத்துக்கான காவிரியின் கொள்ளளவு 93 டிஎம்சி தண்ணீர்தான். காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுப்பது தாயை மானபங்கம் செய்வதற்கு சமம். எனவே, மணல் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆற்றில் மணல் எடுக்க முயன்றால், பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும்.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த விளையாட்டைத் தடை செய்ய சட்ட திருத்தம் கொண்டு வந்து, விரைவில் அமல்படுத்த வேண்டும். போதை பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கூட சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில், இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எதிர்காலத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில், இட ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். சமூக நீதிக்கு எதிரான அத்தகைய நிலைப்பாட்டை எடுக்க கூடாது. பல அரசியல் கட்சிகள் சூழ்ச்சியால் மக்களை பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்றவற்றை பற்றி தான் பேச வேண்டும். அதற்காக, வளர்ச்சியை அடிப்படையில் மக்களை இணைப்பதற்காக, 2.0 பி.எம்.கே. என்ற செயல் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டு பார்கள் நடத்துவதால், டாஸ்மாக் கடைகளை மூடாமல் உள்ளனர். அதிமுக வைத்துள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால் பாமக வெற்றகளின் எண்ணிக்கை அடிப்படையில் எதிர்க் கட்சியாக உள்ளது.

காவல் துறையைப் பொருத்தவரை ஏதோ பிரச்னை இருப்பதால் தான் லாக்கப் டெத்துக்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கு மனரீதியான பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியத்தை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் காவல்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார். எனவே முதல்வர், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அறிவுரை வழங்க வேண்டும். கொரோவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO

G-QSXGXN2B7K