கலையரங்க திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய திருச்சி மாநகராட்சி நிர்வாகம்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது. இங்கு 75 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 25 சாதாரண படுக்கை வசதிகளும் கொண்ட 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். சுகாதார அலுவலர்கள் கூறுகையில், நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கான அடுத்தகட்ட முயற்சியாக கலையரங்கத்தில் கொரானா சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளோம். இந்த சிகிச்சை மையத்தில் 18 மருத்துவர்கள் மற்றும் 10 செவிலியர்கள் பணிபுரிய இருக்கிறார்கள்.
இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகள் தேவைப்படும் எனில் அதனையும் ஏற்பாடு செய்து முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் மக்களுக்கு இங்கு சிகிச்சை தொடங்கப்படும் என்று மாநகர சுகாதார அலுவலர் மருத்துவர் எம்.யாழினி தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை மையத்தின் வளாகத்தின் வெளியே நோயாளிகளின் பயன்பாட்டிற்காக எப்பொழுதும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும்.
மருத்துவ கல்லூரி மற்றும் ஊரக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பரிந்துரைக்கப்பட்ட லேசான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை மையத்தில் தற்போது சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK