திருச்சி அரசு மருத்துவமனையில் செயற்கை துளை சிகிச்சை மையம்- முதல்வர் தொடங்கி வைத்தார்

திருச்சி அரசு மருத்துவமனையில் செயற்கை துளை சிகிச்சை மையம்- முதல்வர் தொடங்கி வைத்தார்

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று 19.4.2022 உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டது.வயிறுகழிவு வெளியேற்று செயற்கை துளை சிகிச்சை மையத்தினை (ஸ்டோமா கேர்) தொடங்கி வைத்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர்.K.வனிதா அவர்கள் பேசியதாவது:

ஆரோக்கியமான கல்லீரல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்து கவனம் மேற்கொள்ளவும் உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

கல்லீரல் என்பது ஒரு பெரிய வளர்சிதை மாற்ற உறுப்பு ஆகும்.எந்த நோயிலும் முதலில் பாதிப்பை ஏற்படுத்தும் உறுப்பு கல்லீரல்.உடல் பருமன், நீரிழிவு, அதிக அளவிலான கொழுப்பு சமீபத்திய தொற்றுநோய் கல்லீரலைப் பாதிக்கிறது. இவை அமைதியாக கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்துகின்றன.கல்லீரல் நோய்களில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நல்ல உணவுப் பழக்கம், மது மற்றும் தேவையற்ற மருந்துகளைத் தவிர்த்தல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், தடுப்பூசி மூலம் வைரஸ் தொடர்பான கல்லீரல் நோய்களைத் தடுப்பது ஆரோக்கியமான கல்லீரலின் திறவுகோலாகும். மேலும்

கல்லீரல் மீளுருவாக்கம் செய்வதற்கான ஒரு உறுப்பு ஆகும்.இது காயத்திலிருந்து விரைவாக மீண்டு, தானாகவே மீளுருவாக்கம் செய்கிறது.இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் வெற்றிக்கு வழிவகுக்கிறதுஎனவே இந்த உலக கல்லீரல் தினத்தில்ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடை பிடித்தல், ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இரைப்பை குடல் சார்ந்த அறுவை சிகிச்சை துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வயிறுகழிவு வெளியேற்று செயற்கை துளை சிகிச்சை மையம் மூலமாக ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மருத்துவமனையின் 5 வது மாடியில் அறை எண் 504 ல் காலை 9 மணி முதல் 11 மணி வரை, வயிறு இரைப்பை குடல் சார்ந்த அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் R.R.கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினரால் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் மலக்குடல் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், குடல் அடைப்பு, விபத்துகளால் குடலில் காயம் ஏற்படுதல் போன்றவற்றில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது மலம் ,பித்தநீர் ,சிறுநீர் ஆகியவை வயிற்றின் அடிப்பகுதியில் செயற்கை துளை( ஆஸ்டமி) நோயின் தன்மைக்கு ஏற்ப தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உருவாக்கப்பட்டு, தகுந்த உபகரணங்கள் மூலம் எந்த சிரமமும் இல்லாமல் கழிவு சேகரிக்கும் பை கொண்டு வெளியேற்றப்படுகிறது.

இவற்றை நன்கு பராமரிக்க நோயாளிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சேகரிக்கும் பை உள்ளிட்ட உபகரணங்கள் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டி இருப்பதால் அதனை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் இப்பிரிவில் கட்டணம் இல்லாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிவு கசிவு,தோல் எரிச்சல், துர்நாற்றம் போன்ற அசாதாரண விளைவுகள் நிகழும் போது மேற்கொள்ள வேண்டியவை குறித்து நோயாளிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் நோயாளிக்கு எந்தவிதமான பயமும் மன அழுத்தமும் இல்லாமல் இருப்பதற்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

வரும் நாட்களில் இப்பிரிவின் நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர் கண்காணிப்பு மற்றும் கவனிப்பு அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளர் E.அருண் ராஜ், நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா திருவள்ளுவன், வயிறு இரைப்பை குடல் சார்ந்த அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் R.R. கண்ணன், வயிறு குடல் சார்ந்த மருத்துவ சிகிச்சை துறை பேராசிரியர் M.மலர்விழி, மருத்துவர்கள் S.சங்கர்,K. ராஜசேகரன், M. கார்த்திகேயன், N.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உலக கல்லீரல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO