ஸ்ரீவாரி சதங்கை நாட்டியாலயா நடனப் பள்ளியின் முதல் சலங்கை பூஜை

ஸ்ரீவாரி சதங்கை நாட்டியாலயா நடனப் பள்ளியின் முதல் சலங்கை பூஜை

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீவாரி சதங்கை நாட்டியாலயா நடனப் பள்ளியின் முதல் சலங்கை பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சதிர் நடனக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக் கண்ணம்மாள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்வின் தொடக்கத்தில் பத்மஸ்ரீ முத்துக் கண்ணம்மாள், நடனப்பள்ளி இயக்குநர் செல்வி ஹரிணி, ராஜன் பாபு, கவிதா ராஜன்பாபு ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஐந்து மாணவர்கள் சலங்கை பூஜை நடன உருப்படிகளை நிகழ்த்தினர். புஷ்பாஞ்சலி தொடங்கி மங்களம் வரையிலான செவ்வியல் நடன உருப்படிகளை மாணவர்கள் M.சஞ்சனா ஸ்ரீ, K.மோகனா, ஸ்ரீ, R. யாழினி, S.கிருபாசினி, V.ஹர்சினி பிரியா ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பத்மஸ்ரீ முத்துக் கண்ணம்மாள் தனது சிறப்புரையில் நாடகக் கலைஞர்களும் தமிழறிஞர்கள் வாழ்ந்து சிறந்த மணப்பாறையில் இது போன்ற பரதக் கலையை கலைஞர்களை உருவாக்குவது பெரும் பாராட்டிற்குரியது.

நடுத்தர உழைக்கும் விவசாய மக்கள் அதிகமுள்ள பகுதியில் செவ்வியல் நடனக்கலையை மரபு மாறாமல் மக்களிடம் வளரும் தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலானது. அதனைச் சிறப்பாக காலத்திற்கேற்ப கடின உழைப்புடன் இளைய தலைமுறையிடம் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுக்கும் பணியில் உள்ள இயக்குநர் பயிற்றுநர் ஹரிணி ராஜன்பாபு அவர்களை சதிராட்டக்கலைஞர் என்ற முறையில் பெருமையுடன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை கலைகள்தான் பாதுகாத்து வருகிறது. கலைஞர்கள்தான் காலந்தோறும் உயிர்ப்புடன் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களைப் பாதுகாப்பது சமூகத்தின் முதல் கடமையாகும் என்றார். வளரும் இன்றைய சிறார்கள் வீடியோ கேம்களில் வாழ்வை நேரத்தை தொலைத்து, இன்டர்நெட் அடிமையாக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அது போன்ற கொடுமைகளில் இருந்து மீட்டு அவர்களுக்கு இது போன்ற கலைகளிடம் நாட்டம் கொள்ளச் செய்ய பெற்றோர்கள் முன்வர வேண்டும். கலையைக் கற்றுக்கொள்வதால் மதிப்பெண்கள் குறையாது. மாறாக கலைகள்தான் மாணவர் மனதைப் பண்படுத்தும் நல்ல மனிதனாக மேம்படுத்தும்.

இதனைப் புரிந்துகொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கலைகளைக் கற்றுக்கொள்ள துணைபுரிய வேண்டும் என்றார். மதிப்பெண்களை விடவும் மாணவர்களின் எதிர்கால வாழ்வியல் மதிப்பு வாய்ந்தது. நல்ல வாழ்வியல் மதிப்பீடுகளை கலைகளே கற்றுத்தர உதவும் என்றார். பரதக்கலையை கற்றுக்கொள்ள துணை நின்ற பெற்றோர்களைப் பாராட்டி  மாணவர்களை வாழ்த்தினார்.

வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா சுப்பிரமணி, கவிதா ராஜன் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாட்டியப் பள்ளியின் இயக்குநர் நடனப் பயிற்றுநர் ஹரிணி நன்றி கூறினார். நடன, இசைப் பயிற்றுநர்களான ஜோன் மேனகா, அரவிந்த், பீட்டர், கண்ணதாசன், ஆகாஷ், விஜய்கிருஷ்ணகாந்த், உள்ளிட்ட கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO