ஓயாமரி சுடுகாட்டில் வீசப்படும் PPE Kit எனப்படும் கவச உடைகள் - ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாநகராட்சி பணியாளர்கள்!!

ஓயாமரி சுடுகாட்டில் வீசப்படும் PPE  Kit எனப்படும் கவச உடைகள் - ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாநகராட்சி பணியாளர்கள்!!

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமாக ஓயாமரி, உறையூர் கோணக்கரை, கருமண்டபம் ஆகிய 3 இடங்களில் மின் மயானங்கள் உள்ள நிலையில், எரிவாயு மூலமும் உடல் தகனம் செய்யப்படுகின்றது.

Advertisement

காவிரிக் கரையோரம் உள்ள ஓயாமாரி சுடுகாட்டில் நாள்தோறும் 8 முதல் 10 சடலங்கள் எரியூட்ட படுகின்றன. திருச்சி மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து  எரிக்கும், புதைக்கும் சுடுகாடாக ஓயாமரி இருக்கிறது. இங்குள்ள எரிவாயு தகன மேடையை பராமரிக்கும் பணியை மேற்கொண்ட 'பைரவ்' என்ற தொண்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த, 10 மாதங்களுக்கு முன்காலாவதியாகி விட்டது.

அதையடுத்து, மாநகராட்சி மூலம் பிரேதங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. ஒரு பிரேதம் எரியூட்ட ரூ.1,500 கட்டணம் என்றாலும் கூட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இங்கு எழுவதுண்டு.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் இங்கு கொண்டு அவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உடனடியாக தகனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக பிரேதங்களை குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பிரேதங்கள் மூன்று மணி நேரம் 4 மணி நேரம் காக்க வைக்கப்படும் அவலம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொற்று பாதித்த உடல்களை 108 ஆம்புலன்சில் கொண்டுவரும் மாநகராட்சி பணியாளர்கள் தாங்கள் பயன்படுத்திய 

PPE Kit எனப்படும் கவச உடைகளை தகனம் செய்யும் இடத்தின் அருகிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். அவை முறையாக எரிக்கப்பட்டு அழிக்கப்படவேண்டும் வேண்டும். ஆனால் அதன் அபாயம் புரியாமல் கவச உடைகளை வீசி செல்வது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலங்களில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கால் ஓயாமரி சுடுகாட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.