இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மகாமாரியம்மன் கோயிலை கொண்டுவர பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மகாமாரியம்மன் கோயிலை கொண்டுவர பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் 8 ஊரை சேர்ந்த பொதுமக்கள் வழிபடும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தகோயிலில் நடைபெறும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நிர்வாகி சீனிவாசன் என்பவர் விழா குழுவினர் சேர்ந்து நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் நிர்வாகி சீனிவாசன் மீது சிலர் ஊழல் குற்றச்சாட்டு புகார்களை அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்த்தி அடைந்த 8 ஊர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளூர் மகா மாரியம்மன் கோயில் முன்பு திரண்டனர்.

அங்கு கோயிலை நிர்வகித்து வரும் நிர்வாகி சீனிவாசன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்வது, வெள்ளூர் மகா மாரியம்மன் கோயில் கிராமப்புற கோயில் என்பதால் இக்கோயிலை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல் பொதுமக்களே நிர்வகித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோயில் முன்பு பொதுமக்கள் திரண்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை செயல் அலுவலர் மற்றும் ஆய்வர் வெள்ளூர் கிராமத்திற்கு நேரில் வந்தனர். அவர்களிடம் கிராம மக்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கோயிலை எடுக்க கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மனுவை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிராமப்புற கோயிலை அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என வலியுறுத்தி எட்டு ஊர் கிராம மக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோயில் முன்பு திரண்டதால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்களை தடுக்க முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn