14 வயது சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சித்த 2 திருநங்கைகள் கைது - எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்!
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே 14 வயது சிறுவனை திருநங்கையாக மாற்ற முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இரண்டு திருநங்கைகளை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். தன்னிடம் வெற்றுப் பேப்பரில் சில திருநங்கைகள் கையொப்பம் பெற்று பொய்யான புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசாரிடம் கூறியும், திருநங்களைகளை கைது செய்ததை கண்டித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தினை 70 திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.
Advertisement
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது மகன் தர்வீஸ் மைதீன் என்ற சபனா (14). சபனா வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுற்றியுள்ளார். அப்போது அங்கிருந்த திருநங்கைகளிடம் தான், திருநங்கையாக மாறுவதாக விருப்பம் தெரிவித்தாராம். அதனடிப்படையில் சிறுவனை சமயபுரம் அருகே கூத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்த ஏகாம்பரம் மகள் சத்யா (30), பாஸ்கரன் மகள் அபர்ணா (23) ஆகியோர் தங்க வைத்துள்ளனர். இதனை அறிந்த சில திருநங்களைகள் சிறுவன் சபானா விடம் வெற்று பேப்பரில் கையொப்பம் பெற்று புதுடில்லி குழந்தைகள் நல ஆணையம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
Advertisement
இதனடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனையும், அபர்னா, சத்யா ஆகிய இரு திருநங்கைகளையும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து சிறுவனை கட்டாயப்படுத்தி திருநங்கையாக மாற்ற முயற்சித்ததும் , மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அபர்னா, சத்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதனை அறிந்த திருநங்களைகளின் தலைவி சோனாலி உள்ளிட்ட 70திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் பொய்யான புகாரில் கைது செய்த இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி காவல் சரக டிஎஸ்பி ராதாகிருஸ்'ணன் தலைமையில் லால்குடி, சமயபுரம், சிறுகனூர் ஆகிய 3 காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் திருநங்கையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தங்களுக்கு எதிராக திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை தலைவியின் தூண்டுதலினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் வெற்றுப் பேப்பரில் கையெப்பம் பெற்று புகார் அளித்ததாக திருநங்கை தலைவி சோனாலி குற்றம்சாட்டினர்.
புகாரின் பேரில் வழக்கு பதிந்து கைது செய்துள்ளதாகவும், நீதிமன்றம் வாயிலாக பரிகாரம் தேடிக்கொள்ள போலீசார் அறிவுறுத்தியதின் பேரில் திருநங்கைகள் கலைந்து சென்றனர். கைதான இரு திருநங்கைகளையும் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, ஆண் மற்றும் பெண் தன்மை குறித்து பரிசோதனை முடிவுக்கு பின் சிறையில் அடைக்க உள்ளனர்.
தர்வீஸ் மைதீன் என்ற சபனா. ( புகார் அளித்த சிறுவன் ) செய்தியாளர்களிடம் கூறியதாவது, தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என்றும் தன்னிடம் வெற்றுப் பேப்பரில் சில திருநங்கைகள் கையெழுத்துப் பெற்று இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் பாதிக்கபட்ட சிறுவன் அவரது தாயுடன் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றனர்.