அரசு பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய வகை நெகிழி சேகரிப்பான்

அரசு பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய வகை நெகிழி சேகரிப்பான்

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், தொழில்நுட்பங்களை சமூகத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தும் வகையில் அடல் டிங்கரிங் லேப் (Atal Tinkering Laboratory) என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. தமிழ்நாட்டில் 3000 பள்ளிகளில் திட்டமானது செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பாளராக Propeller Technologies Trichy குழுவினர் 4 ஆண்டுகளாக தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவித்து உதவி வருகின்றனர்.

இந்தத் திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப மாணவர் இயக்கத்தின்  மூலம் இந்திய அளவில் மூன்று முறை பரிசுகளை வென்றுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பிரிவாக "வாழ்வாதாரம்" என்ற மாணவர் இயக்கம் செயல்படுகிறது. இயக்கத்தில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் சமூக அக்கறை கொண்ட அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றனர்.

இயக்கத்தில் இந்தியா முழுவதும் 116 பள்ளிகளில் 93 ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கண்டுபிடிப்பு "நெகிழி சேகரிப்பான்" ஆகும். புரோப்பல்லர் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிக் ரஹ்மான் கூறுகையில்... வாழ்வாதார மாணவ இயக்கம் சமூக அக்கறை கொண்டு இந்த நெகிழி சேகரிப்பானை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சியால் உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு நோக்கமே அடித்தட்டு மக்களுக்கு உதவுவதோடு நெகிழி இல்லாத உலகமாய் மாற்றுவதே ஆகும். இந்த நெகிழி சேகரிப்பானின் சிறப்பம்சங்கள் யாதெனில் போடப்படும் நெகிழி அல்லது குப்பைகளின் எடை மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த நெகிழி சேகரிப்பான் சோதனை கட்ட முயற்சியில் சென்னை மற்றும் திருச்சி மாநகராட்சியின் உதவியோடு 2 மாதங்கள் அடித்தட்டு மக்களான குப்பை சேகரிப்பாளர்கள், பிச்சை எடுப்பவர்கள் இடம் கொடுக்கப்பட்டது.

அவர்கள் இதன் மூலம் ஒரு நாளைக்கு 60 ரூபாய் வரை வருவாய் பெற்றனர். இந்த சேகரிப்பானின் வெளிப்புறத்தில் "உனது குப்பை சமூகத்தில் ஒருவனுக்கு வாழ்வளிக்கும் உனது குப்பையால் சமூகத்தில் வாழ்வு பெற்று சமுதாயத்தை உயர்த்தும் நபர்" என்ற வாசகங்களும் இடம் பெற்றிருக்கிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி ஆனதை தொடர்ந்து இதனை ஒரு ஆவணப்படமாக தயார் செய்தோம். அதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இந்த கண்டுப்பிடிப்பினை முழுக்க முழுக்க அரசு பள்ளி மாணவர்களே உருவாக்கியுள்ளனர். ஆராய்ச்சியினை மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகராயா சாலை மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, சென்னை அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி மாரியப்பன் நாடார் அரசு மேல்நிலை பள்ளி, புதுக்கோட்டை கவரப்பபட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தங்களுடைய தொடர் முயற்சியினால் சாத்தியப்படுத்தி உள்ளனர். வரும் காலங்களில் இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமம் பெற்று சமூகத்தில் அரசு உதவியோடு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது இடங்களில் பொருத்தப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I