திருச்சியில் இளைஞர்கள் நடத்திய ஆட்டோ ரேஸ் - வாகன ஓட்டிகள் அச்சம்
திருச்சியில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் அதிக வேகம் கொண்ட இருசக்கர வாகனங்கள் இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இருசக்கர வாகனங்களை வைத்து போக்குவரத்து நெரிசல்களில் அதிவேகமாக செல்வதும், சாலைகளில் வீலிங் செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியை சுற்றி உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆட்டோ ரேஸ் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதிகளில் அதிகாலையில் ஆட்டோ ரேஸ் போட்டி நடத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து சென்று ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று திருச்சி - மணப்பாறை தேசிய நெடுஞ்சாலை சத்திரப்பட்டி பகுதியில் இருந்து மணப்பாறை நோக்கி இரண்டு ஆட்டோக்கள் ரேஸ் போட்டியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். இதில் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு அதிவேகத்தில் இரண்டு ஆட்டோக்களுக்கிடையே போட்டி நடைபெற்றது. இது மட்டுமின்றி இந்த ஆட்டோகளுக்கு பாதுகாப்பாக ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு தலைக்கவசம் கூட அணியாமல் அந்த ஆட்டோகளுக்கு இணையாக சத்தம் எழுப்பிக் கொண்டு இளைஞர்கள் சென்றனர்.
இதனால் அந்த தேசிய நெடுஞ்சாலை சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். பெருநகரமான சென்னையில் இது போன்ற ஆட்டோ ரேஸ்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது திருச்சியிலும் ஆட்டோ ஓட்டக்கூடிய இளைஞர்கள் மத்தியில் ரேஸ் நடத்துவது அதிகரித்துள்ளது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே காவல்துறையினர் தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn