திருச்சி பள்ளி மாணவர்கள் புகார் - அதிரடி ஆய்வு செய்த ஆட்சியர்

திருச்சி பள்ளி மாணவர்கள் புகார் - அதிரடி ஆய்வு செய்த ஆட்சியர்

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இபபள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில் 200 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் இது குறித்து மாணவி ஆர்த்தி கூறுகையில்... பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியையிடம் கேட்டால் அவர்கள் ஒவ்வொரு மாணவரும் ரூபாய் 500 தந்தால் மட்டுமே ஆசிரியரை நியமிக்க முடியும் என தெரிவித்து விட்டனர். இது தொடர்பாக எங்களது பெற்றோர்களும் சென்று கேட்ட பொழுது அவர்களுக்கு மரியாதையும் கொடுக்காமல் சரியான பதில் கொடுக்கவில்லை.

மேலும், பள்ளியில் குடிநீர் மற்றும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. மாணவிகளுக்கு எந்த அடிப்படையில் இல்லாததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மாணவ மாணவிகளின் புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உடனடியாக லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகள் இடமும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர்களிடமும் மாணவ-மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு மாணவ மாணவிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி குடிநீர் வசதி ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவ, மாணவிகளின் புகாருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO