போதை பொருட்களை விற்பனை செய்த ரவுடி உட்பட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள், இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த (15.05.23)-ந் தேதி காந்திமார்க்கெட், வரகனேரி பிச்சைநகர் குழுமிக்கரையில் இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா சுமார் 1.150 கிலோகிராமை கைப்பையில் வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்த வரகனேரியை சேர்ந்த யூனுஸ் (53) என்பவரை பிடித்து விசாரணை செய்தும், எதிரியிடமிருந்து சுமார் 1.150 கிலோகிராம் கஞ்சா, பணம் ரூ.300/- ஒரு செல்போன் இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி, உடனடியாக எதிரியை கைது செய்து, காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த (01.06.23)-ந் தேதி கோட்டை காவல்நிலைய கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தாஜ் திருமணம் மண்டபம் முன்பு மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சீனிவாசன் (40) த.பெ.கண்ணன் என்பவர் ரூ.55,000/- மதிப்புள்ள 56 கிலோ ஹான்ஸ், கூல்லிப் மற்றும் விமல் போன்ற குட்கா போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரி சீனிவாசனை கைது செய்தும், அவரிடமிருந்து ரூ.15,890/- மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள், பணம் ரூ.6,57,320/-, செல்போன்-9 மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி யூனுஸ் காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் ரவுடி என்பதும், அவர் மீது காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகளும், NIB-CID-ல் கஞ்சா விற்பனை செய்ததாக 2 வழக்குகளும், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 1 வழக்கும், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 1 வழக்கும், திருச்சி பெரியகடைவீதியில் தள்ளுவண்டி பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் 1 வழக்கு உட்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, எதிரிகள் யூனுஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் எண்ணம் உடையவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.