திருச்சியில் இன்ஸ்பெக்டர் வீடு மற்றும் இ-சேவை மையத்தில் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது
திருச்சி கே.கே.நகர் அடுத்துள்ள சாத்தனூர் பிரேம் நகரை சேர்ந்தவர் ஆனந்த் செல்வம் (50). இவர் சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி இவர் தில்லை நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசதி வசித்து வருகிறார். அவ்வப்போது பிரேம் நகருக்கு சென்று வீட்டை பராமரிப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரேம் நகருக்கு சென்று தனது வீட்டை பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து அரைப்பவுன் தங்க கம்மல் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் திருடியவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சுகாமாலப்பட்டி பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வடுக தெருவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (26), தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.எம்.எஸ் காலனி சேர்ந்த சூரியமூர்த்தி (26) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் காவல் ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து திருடியது, சில வீடுகளும் திருடியது தெரிய வந்தது.
மேலும் கரூர் மாவட்டத்தில் இ-சேவை மையத்தில் பூட்டை உடைத்து மடிக்கணினி, பிரிண்டர்கள் போன்றவற்றை திருடியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் 5000, வெள்ளி டம்ளர், இருசக்கர வாகனம், மடிக்கணினி பிரிண்டர் போன்றவை திருடப்பட்ட பொருட்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய இரும்பு ராடு, ஸ்கூட்ரைவர், கையுறைகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision