டப்பா வண்டியில் பிரதமர் நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளர்கள் அழைத்து சென்ற 'விவகாரம்' - 1 கி.மீ தூரம் நடக்க வைத்த அவலம்.
திருச்சியில் விமான நிலையத்தின் 2வது புதிய முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நேற்று (02.01.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ரவி மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் செய்தி சேகரிப்பதற்கும் போட்டோ, வீடியோ எடுப்பதற்கும், செய்தி நிறுவனத்தின் கடிதம் மற்றும் நான்கு புகைப்படங்கள் உட்பட பல்வேறு விதிமுறைகளை கடைசி நேரத்தில் கூறி திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையினர் செய்தியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அவற்றை பின்பற்றி கொடுத்தவர்கள், அங்கீகாரமில்லாதவர்கள் என அனைவருக்கும் அடையாள அட்டையில் கார் பாஸ் என அச்சடித்து பிரஸ் என்ற வார்த்தை கூட இல்லாமல் பாஸ் ஒன்று கொடுத்தனர். அதிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க அனுமதி இல்லை என கடைசி நேரத்தில் கூறி அந்த அனுமதி அட்டையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். அங்கு அழைத்துச் செல்வதையும் தவிர்த்து விட்டனர்.
ஒரு வழியாக திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவுக்கு பெயரளவுக்கு பாஸ் தயார் செய்து கொடுத்த செய்தி மக்கள் தொடர்பு துறையினர் 2 மினி பஸ்சில் அழைத்து சென்றனர். முறையாக பராமரிக்கப்படாத டப்பா வண்டி இரும்பு கடைக்கு செல்ல வேண்டிய இரண்டு மினி பஸ்களில் செய்தியாளர்களையும், போட்டோ மற்றும் வீடியோ கிராபர்களையும் ஸ்டான்டிங்கில் விமான நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் அழைத்துச் சென்றனர்.
பிரதமர் நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்கள் விழா மேடை விட்டு வெளியே வந்து தங்களுக்குரிய கேமரா, நேரலை கருவிகள் ஸ்டாண்ட் உள்ளிட்டவைகளை சுமந்து வெளியே வந்தனர். அங்கே வந்து பார்த்த பொழுது மினி பஸ் அங்கு இல்லை. தொடர்பு கொண்டால் மக்கள் தொடர்பு அதிகாரிகள் யாரும் தொலைபேசி எடுக்கவில்லையாம். செய்தியாளர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு அனைத்து உபகரணங்களையும் தூக்கி கொண்டு நடந்து வந்தனர். மினி பஸ்ஸில் பிரஸ் என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் காவல்துறையினர் உள்ளே டப்பா வண்டியை நிறுத்த அனுமதிக்கவில்லை.
இதையும் கண்டுகொள்ளாமல் மக்கள் தொடர்பு துறையை சேர்ந்த பணியாளர்கள் அந்த வண்டி திருச்சி - புதுக்கோட்டை சாலைக்கு சென்று நிறுத்தியதை கண்காணிக்கவில்லை. மேலும் வண்டியில் மிகவும் குறைவான பத்திரிக்கையாளர்கள் புறப்பட்டு சென்றனர். இரண்டாவது டப்பா வண்டியில் நெருங்கிக் கொண்டு செய்தியாளர்கள், பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் உள்பட தமிழ்த்தாய் வாழ்த்து பாடி பிரதமரிடம் பாராட்டு பெற்றவர்கள் உள்ளிட்டவர்களை நெருக்கி ஏற்றி விமான நிலையத்திலிருந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வண்டி வந்தது.
ஏன் இந்த நிலைமை என்று விசாரித்த பொழுது மக்கள் தொடர்பு துறை அதிகாரி ஏற்கனவே டெம்போ ட்ராவலர் வாகனத்தை ஏற்பாடு செய்ததாகவும், கடைசி நேரத்தில் மற்றொரு அதிகாரி மினி பஸ்சை ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் கசிகின்றன. எது உண்மையோ எப்படி இருந்தாலும் மூத்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் அனைவரும் நாட்டின் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு டப்பா வண்டியில் அழைத்து சென்றது நியாயமா என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடமே விட்டுவிடுவதாக செய்தியாளர்கள் புலம்பி விட்டு சென்றனர். செய்தியாளர்களுக்கு கொடுத்த அடையாள அட்டையில் வாகனங்கள் நிறுத்தக்கூடிய கார் பாஸ் என்று எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதற்கு அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களிடம் அவசர கதியில் கடைசி நேரத்தில் கடிதம் கேட்கப்பட்டது.
செய்தி மக்கள் தொடர்பு துறை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து கடிதங்களை கொடுப்பவர்களுக்கு மட்டுமே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் அனுமதி அளிப்பார்கள் என்று சொல்லி இவர்கள் இஷ்டத்திற்கு பாசை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இன்னோவா காரில் புதிய முனையத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் செய்தியாளர்களை கண்டு கொள்ளாமல் சொகுசாக காரில் ஏறி சென்று விட்டனர். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 'ஜனநாயகத்தின் நான்காம் தூண்களை' அழைத்து வந்து அவர்களை கசக்கி பிழிந்து நடக்க வைத்து டப்பா வண்டியில் அழைத்து சென்றது திருச்சி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி பத்திரிகையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.