தமிழகத்தில் பாரதிய ஜனதா … கரைசேருமா? கரைந்துவிடுமா?

தமிழகத்தில் பாரதிய ஜனதா … கரைசேருமா? கரைந்துவிடுமா?

தேசிய அளவில் சிங்கம், புலி எனச் சீறும் பாரதிய ஜனதா தமிழகத்தைப் பொறுத்தவரையில் பூனைக்குட்டியாகத் தான் இருக்கிறது. எந்தப் பெரிய கட்சியின் ஆதரவும் இல்லாவிட்டால் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியாகத்தான் இருக்கும் என்ற கிண்டலில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழக அரசியலில் நாங்கள்தான் ’தாதாக்கள்’ என திமுகவும் அதிமுகவும் கோலோச்சி வருகின்றன.

இந்த இரு கட்சிகளுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்துச் சுயத்தை இழந்த காங்கிரசும், ஒருசில இடங்களுக்காக, இக்கட்சிகளில் ஏதேனும் ஒன்றை  அண்டிப் பிழைக்கவேண்டிய நிலையிலேயே உள்ளது. இந்தச் சூழலில் திமுகவிலும் அதிமுகவிலும் இருந்த இருபெரும் ஆளுமைகள் மறைந்ததால், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், கர்நாடகம் போலத் தமிழகத்திலும் காலூன்றத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியது பாரதிய ஜனதா. முதற்கட்டமாக மாநிலத் தலைமையில் இளரத்தம் பாய்ச்சியது. மாநிலத் தலைவராகக் களமிறங்கிய முருகன்.

திராவிட மாடலில் அரசியல் செய்யத் தொடங்கினார். பல பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த ‘அரசியல் தாதாக்கள்’ தாமரக்குளத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். திராவிடக் கட்சிகளைப்போல் ‘அதிரடி அரசியல்’ செய்யத் தொடங்கியது தமிழக பாரதிய ஜனதா. ஒருகட்டத்தில் முருகனின் ’பவர் ப்ளே ஆட்டம்’ போதுமென்று எண்ணிய தேசியத் தலைமை, அவருக்கு அமைச்சர் பதவி என்ற ‘டெல்லி அல்வா’வைக் கொடுத்து தலைமைப் பதவியிலிருது அகற்றியது. அடுத்ததாக ஆட வந்தார் ஐபிஎஸ் அண்ணாமலை. அவரும், கோலி, ரோஹித்தை மிஞ்சும் விதமாக வார்த்தைகளால் சிக்சரும் பவுண்டரிகளும் அடிக்க ஆரம்பித்தார். சில ஷாட்டுகள் அவரையே திருப்பித் தாக்கிப் பதம் பார்த்தாலும், வாயைச் சுழற்றுவதை அவர் நிறுத்தவே இல்லை. கூட்டணியில் இருந்த அதிமுகவையும் அவரது வாய் விட்டுவைக்கவில்லை.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அதிமுக,, எனது மைதானத்தில் நின்றுகொண்டு என்னிடமே விளையாடுகிறாயா என்று சீற, பஞ்சாயத்து டெல்லிவரை சென்றது. இருந்தாலும், இனித் தாமரையை வளரவிட்டால் குளத்தை முற்றிலும் ஆக்கிரமித்துவிடும் என்பதை உணர்ந்த அதிமுக, கூட்டணிக் காம்பைக் கிள்ளிவிட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கொடுத்த அதிர்ச்சியால் ‘ஜெர்க்’ ஆன தாமரைத் தலைமை, நிலைமையைச் சமாளிக்கத் தன்னால் இயன்ற முயற்சிகளையெல்லாம் செய்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியை விமர்சித்த தங்கள் கூட்டணியிலேயே ஓட்டை விழுந்துவிட்டதால் தடுமாறுகிறது தாமரைத் தலைமை. தமிழ்நாட்டில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்றால், பாமகவின் பார்வை திமுக பக்கம் இருக்கிறது. தேமுதிகவில் விஜயகாந்த் ‘ஆக்டிவ்’ ஆக இல்லாத நிலை. மீதமிருக்கும் உதிரிக்கட்சிகளில் சிலவற்றைச் சேர்த்துக்கொண்டு ’பெயருக்கு’ வேண்டுமானால் ’கூட்டணி’ அமைக்கலாம். அத்தகைய ‘பலம்’ மிக்க கூட்டணி தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு ’ஆட்டம்’ காட்டுமா? இல்லை, நோட்டாவுடன் போட்டி போட்டு ‘’ஓட்டம்’ எடுக்குமா என்பதை ‘அரசியல் சாணக்கியர்களான’ நட்டாவும் அமித்ஷாவும்தான் கணிக்கவேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision