எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தற்போது வலுவாக இருக்கிறது - திருச்சியில் முன்னாள் அமைச்சர் பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தற்போது வலுவாக இருக்கிறது - திருச்சியில் முன்னாள் அமைச்சர் பேட்டி

திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி அதிமுக செயல் வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில்...... அதிமுக பேசி வளர்ந்த இயக்கம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது தொண்டர்கள் பேச வேண்டும். இன்று வரிசையாக 20 காரில் வந்தோம். இப்படி ஒன்றாக செல்வது அதிமுகவில் தான் நடக்கும். எடப்பாடி பழனிச்சாமி கீழ் நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் எடப்பாடியாரது ஒற்றைத் தலைமையின் கீழ், அண்ணா திமுகவில் நாமும் ஒரு அங்கம் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்தவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு விதமானது. திருச்சி என்பது அதிமுகவின் கோட்டை. அது திமுகவிற்கு வெறும் மண் கோட்டை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற காலத்தில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், பிரச்சாரத்துக்கு செல்லாமல், வாக்கு கேட்காமல், அதிமுகவை வெற்றி பெற செய்து, எம்.ஜி.ஆர் யை ஆட்சி பொறுப்புக்கு கொண்டு வந்தவர்கள் நமது தொண்டர்கள். 

மலைக்கோட்டை மாநகரத்தை, அதிமுகவின் எஃக்கு கோட்டையாக மாற்றுவதற்கான மனத் துணிவை அதிமுக தொண்டர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிமுகவை வெற்றி பெறச் செய்யக் கூடிய கடமை அதிமுக வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உண்டு. வெற்றியை தேடிக்கொடுப்பது அவர்களது கைகளில் தான் உள்ளது. நீங்கள் மனசு வைத்தால் போதும் வெற்றி நிச்சயம்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைப்பதை எடப்பாடியார் பார்த்துக் கொள்வார். அதிமுக வை வெற்றி பெற்றச்செய்வோம். அதிமுக ஆட்சியை அமைப்போம் என்றார். 

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்.... அதிமுக தீவிரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றி நடையின் பலனாக வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார்.

திமுக ஆட்சியின் மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். அந்த அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வலுவோடு இருக்கிறது. தேர்தல் கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி பார்த்து கொள்வார் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision