மத்திய பேருந்து நிலையத்தில் போலீசாரை தாக்க முயன்ற நபரால் பரபரப்பு

மத்திய பேருந்து நிலையத்தில் போலீசாரை தாக்க முயன்ற நபரால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மனைவியை அழைத்துக் கொண்டு வந்த போது விக்னேஸ்வரன் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் பொது மக்களையும் கடுமையாக திட்டி உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தி என்ன நடந்தது என கேட்டனர். இருப்பினும் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஸ்வரன் ஒரு கட்டத்தில் அவர்களை தாக்க முயன்றார். 

காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் உச்சகட்ட மது போதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்ததால் கோபமடைந்த விக்னேஸ்வரன் காவல்துறையினரை தாக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கூடுதலாக காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு அவரை கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் மைத்துனர் வரவழைத்து விசாரணை நடத்திய பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தது மட்டுமல்லாமல், நடுரோட்டில் மனைவி தாக்கியதும், சமாதானம் செய்ய வந்த காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn