த.வெ.க நிர்வாகி மறைவுக்கு பதாகை வைத்த சமூக ஆர்வலரை எஸ்.பி அலுவலக வளாகத்தில் குண்டு கட்டாக வேனில் ஏற்றிய காவல் ஆய்வாளர் - பரபரப்பு

த.வெ.க நிர்வாகி மறைவுக்கு பதாகை வைத்த சமூக ஆர்வலரை எஸ்.பி அலுவலக வளாகத்தில் குண்டு கட்டாக வேனில் ஏற்றிய காவல் ஆய்வாளர் - பரபரப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்த மறைந்த வழக்கறிஞரும், தமிழக வெற்றி கழகம் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவருமான சீனிவாசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டது.

மேலும் இந்த பலகையினால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது எனக் கூறி காவல் ஆய்வாளர் நிக்சன் உத்தரவின் பேரில் விளம்பரப் பலகையினை அகற்ற நவல்பட்டு காவல் நிலைய காவலர்கள் தொலைபேசி வாயிலாக கூறினர். இதனை அறிந்த அப்பகுதியைச் சார்ந்த அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் மகேந்திரன், அந்த காவலர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கண்ணீர் அஞ்சலி பதாகையுடன் சேர்த்து சாலை மேல் வைக்கப்பட்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள மற்ற விளம்பர பதாகைகளையும் எடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார்..

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு தனது வாகனத்தில் வந்த நவல்பட்டு காவல் ஆய்வாளர் நிக்சன் அங்கு இருந்த இளைஞர்களிடம் கண்ணீர் அஞ்சலி பதாகையை மட்டும் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கண்ணீர் அஞ்சலி பலகையை மட்டும் அகற்றியுள்ளனர். பின் மற்ற விளம்பர பதாகைகளை அகற்றாமல் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் நிக்சன் சென்று விட்டார்.

இதனை தொடர்ந்து மகேந்திரன் இன்று காலை எஸ் பி அலுவலகம் சென்று மனு கொடுப்பதற்காக அமர்ந்திருந்தார். திடீரென்று அங்கு வந்த நவல்பட்டு ஆய்வாளர் நிக்சன், எஸ் பி அலுவலகத்தில் இருந்து மகேந்திரனை இழுத்து அவரது வாகனத்தில் ஏற்றி எங்கு கொண்டு சென்றுவிட்டார். இதற்கிடையில் போலீசார் கைது செய்த போது மகேந்திரன் வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் வலுக்கட்டாயமாக காவல் ஆய்வாளர் நிக்சன் மகேந்திரனை இழுத்துச் சென்ற காட்சி அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision