திருச்சி காவிரி கரையோரங்களில் களை கட்டிய ஆடிப்பெருக்கு விழா
தமிழ் மாதமான ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வற்றாத நதிகள் பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டாலும் காவேரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை.
இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு மஞ்சள் கயிறு, கருகமணி, பூ, மாலை, வளையல், தேங்காய் அரிசி, வெள்ளம், பழங்கள் வைத்து வணங்கி பெண்கள் மஞ்சள் கயிற்றை கழுத்திலும், ஆண்கள் கையில் கட்டிக் கொள்வர்.
மேலும் புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவர். தற்பொழுது காவேரியில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஆறுகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆடிப்பெருக்கு கொண்டாட வரும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பு கட்டைகளை தாண்டி மக்கள் செல்லாதவாறு இரும்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆற்றல் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் திருச்சி மாவட்டத்தில் 55 நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அந்தந்த இடங்களில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் இரு கரையிலும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால் ஏராளமான கிராம மக்களும் படித்துறைகளில் வந்து கும்மியடித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO