அழிவின் விளிம்பில் திருச்சியின் அடையாள சின்னம்

அழிவின் விளிம்பில் திருச்சியின் அடையாள சின்னம்

திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாகவும், பெருமை சேர்ப்பது மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில். இங்கு NSB ரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு இந்த பகுதிகளை சுற்றி முக்கியமான ஜவுளிக்கடைகளும், நகைக்கடைகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக மலைக்கோட்டை பகுதியை சுற்றிலும் தரைக்கடை வியாபாரமும் நடைபெறுகிறது.

இந்தப் பகுதியில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இதில் மலைக்கோட்டை தாயுமான கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் அதிக அளவில் உள்ளன. இந்தக் குளத்தில் திண்பன்டங்கள் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய ஹோட்டல்களில் உள்ள கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் தண்ணீர் மாசுபட்டு புனித தன்மை கெட்டுவிடுகிறது. இதனால் குளத்தில் உள்ள மீன்கள் அடிக்கடி செத்து மடிகின்றன.

ஏற்கனவே மூன்று முறை இதுபோல் மீன்கள் உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மீன்கள் பிடிக்கப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தில் இருந்தும் நீரை எடுத்து சோதனை செய்தார்கள். அதன் பிறகு இப்பொழுதும் நீர் முழுவதும் மாசுபட்டு அங்கு இருக்கக்கூடிய மீன்கள் அனைத்தும் செத்து மடிகின்றன.

அது மட்டும் இல்லாமல் தண்ணீரில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது. இதற்கு முக்கிய காரணம் தெப்பக்குளத்தில் அருகில் ஓடும் சாக்கடை நேரடியாக தெப்பக்குளத்தில் கலக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இதனை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் தெப்பக்குளத்தை சாக்கடையாக மாறும் நிலையை தடுக்காமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே திருச்சி மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வாய்க்காலாக உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் சாக்கடையாக மாறி வரும் நிலையில், அறநிலைத்துறை மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைக்கோட்டை தெப்பக்குளம் சாக்கடையாக மாறுவதை கண்டு சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் மிகுந்த மன வேதனை அடைகின்றனர். 

இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நம்பர் ஒன் மாநகராட்சி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள திருச்சி இதுபோன்று திருச்சி அடையாளமாக இருக்கக்கூடிய மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் நேரடியாக கழிவு நீரை கலப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

எனவே சாக்கடையாக மாறி வரும் தெப்பக்குளம் நீரை முழுமையாக வெளியேற்றி புதிய தண்ணீரை விட்டு தெப்பக்குளத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision