திருச்சியில் அமைச்சர் திறந்து வைத்த பேருந்து நிறுத்த கட்டிடத்தில் குளறுபடி! - பயணிகள் கேள்வி?
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி (2023-2024) திட்டத்தின் கீழ் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் புதிய பேருந்து நிறுத்தத்தின் மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. மேலும் அமைச்சர் கே என் நேரு வருவதற்கு முன்பாக புதிய பேருந்து நிறுத்தத்தின் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தது. இதனை பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதை கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உடனடியாக அதனை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதற்குள்ளாக அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அப்படியே நின்று விட்டனர். இதனை தொடர்ந்து பேருந்து நிறுத்த கட்டிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள திமுக கொடியை அமைச்சர் கே.என்.நேரு ஏற்றி வைத்து புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அமைச்சர் சென்றதும் அதிகாரிகள் மேலே சரிந்து விழுந்த எழுத்துக்களை ஊழியர்கள் கொண்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பயணிகள் நிழற்குடை என்ற வரிகளில் இருந்து ஒவ்வொன்றாக விழுந்ததை அடுத்து பயணிகள் நிழற்குடை என்ற வார்த்தைகள் முழுவதுமாக பணியாளர்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது .
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பயணிகள் நிழற்குடை என்பது நீக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். பேருந்து நிறுத்த நிழற்குடையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களின் நிலைமையே திறந்து வைத்த நாளே இப்படி என்றால் கட்டிடம் எந்த அளவுக்கு இருக்கும் என கட்டிடத்தின் உறுதி தன்மையை உடனடியாக ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision