திருச்சி திருக்கரம்பனூர் ஆன்மீகச் சுற்றுலா

திருச்சி திருக்கரம்பனூர் ஆன்மீகச் சுற்றுலா

திருமங்கை ஆழ்வார், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கரம்பனூர் என்ற ஆன்மீகத்தலம் ஆகும். ஆழ்வாரும் நாயன்மார்களும் பாடிய தலம் என்பதைக் கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். ஆம் இது ஒரு வைணவ மற்றும் சைவத் திருத்தலம் மட்டுமல்ல இங்கு பிரம்மாவிற்கும் தனி சன்னிதி இருப்பதால் இது மும்மூர்த்திகள் திருத்தலம் ஆகும்.

திருச்சியில் உத்தமர்கோவில் தானே மும்மூர்த்திகள் தலம் இது என்ன திருக்கரம்பனூர் என நாம் ஆச்சரியப்படலாம். என்னிடம் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியூர் அன்பர் ஒருவர் திருக்கரம்பனூர் எங்குள்ளது என கேட்க, இப்படி ஒரு இடம் நம்ம திருச்சில எங்க இருக்குன்னு தேடினா, நம்ம உத்தமர்கோவிலே தாங்க... வரலாற்றுக் காலத்தில் இந்த ஊர் திருக்கரம்பனூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

ஆழ்வாரும், நாயன்மார்களும் பாடல்களில் திருக்கரம்பனூர் என்றே குறிப்பிட்டுள்ளனர். புருஷோத்தமப்பெருமாள் இருப்பதால் உத்தமர்கோயில் எனவும், பிச்சாடனப்பெருமான் இருப்பதால் பிச்சாண்டார் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. அருள்மிகு பூரணவல்லித்தாயருடன் புருஷோத்தமப் பெருமாளும், அருள்மிகு சௌந்தரிய பார்வதி அம்மனுடன் பிச்சாண்டேஸ்வரரும், அருள்மிகு சரஸ்வதி அம்பாளுடன் பிரம்மாவும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டாள், ஆஞ்சநேயர், இரட்டை விநாயகர், நவக்கிரகங்கள், தக் ஷிணாமூர்த்தி, பாமா, ருக்மிணி, வேணுகோபால், துர்கை, சண்டிகேஸ்வர் ஆகிய தெய்வங்களும், இங்குள்ளது. இத்திருக்கோவிலில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம், கோவிலுக்குள்ளும், பிரகாரத்திலும் கோவிலின் மண்டபங்கள் உள்ளன. நம்மில் பலர் இக்கோவிலில் திருமணத்திற்கு சென்றிருப்போம். வரலாற்று ரீதியாகவும் பல மன்னர்களின் நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அவை இப்போது பாதியளவு பூமிக்குள் சென்றுவிட்டது.

துர்கைக்கு கீழே கண்ணாடி போட்டுள்ள தலம் கல்வெட்டுக்களைக் காப்பதற்காகத்தான். பிரம்மா பெருமாளை வழிபட்டதாகவும், பிரம்மாவின் ஐந்தாவது தலையை கொய்த சிவபெருமான் இங்கிருந்து லஷ்மியிடம் பிச்சை எடுத்து தோஷம் போக்கியதாகவும் புராணக்கதைகள் உள்ளன. மும்மூர்த்திகளும் உள்ளதால், வாரத்தின் அனைத்து நாட்களிலும் விஷேசமாகக் கொண்ட கோவில் இது.

விஜயதசமி அன்று சரஸ்வதிதேவி முன்பு, பிள்ளைகளுக்கு அரிசியில் பெயர் எழுதி கல்வித் துவக்கி வைக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் கொஞ்சம் சீக்கிரமாகவே சென்றுவிடுவது நல்லது. கோவிலில் சீட்டு வாங்குவது, வெளியில் அரிசி, நோட்டு, பூஜை பொருட்கள் வாங்குவது என சில வேலைகள் செய்துவிட்டுடத்தான் சரஸ்வதிதேவி முன்பு இப்பூஜையை செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இப்பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிரம்மாவுக்கு உகந்த நாள் ஆகையால், அன்றும் விஷேஷமாக இருக்கு. மும்மூர்த்திகளுக்கும் முப்பெரும் தேவியருக்கும் தனித்தனி சன்னிதி உள்ள ஒரே கோவில் மிகவும் குறைவு. அமைதியான ஒரு தெய்வ தரிசனத்திற்கு ஏற்ற இடம்.

தொகுப்பாளர் -தமிழூர், கபிலன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision