தமிழக பட்ஜெட் திருச்சி மக்களுக்கு ஏற்றமா?ஏமாற்றமா?- மக்கள் கருத்து

தமிழக பட்ஜெட் திருச்சி மக்களுக்கு ஏற்றமா?ஏமாற்றமா?- மக்கள் கருத்து

தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு  உள்ளதுஎன்ற சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக பட்ஜெட் திருச்சி மக்களுக்கு ஏற்றமா? ஏமாற்றமா?என்ற தலைப்பில் திருச்சி விஷன்  பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது, பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர் அவர்கள் கருத்துக்கள் பின்வருமாறு,

இளம்பரிதி சமயபுரம்,

திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தபோதிலும் திமுக அரசுக்கு திருச்சி மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதை காட்டுகிறது.திருச்சிக்கு மெட்ரோ ரயில், 600 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட சாலை, உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் வசதி திருச்சியில் புதிய மென்பொருள் பூங்காக்கள்,மருத்துவ கல்லூரி மருத்துவமனை தரம் உயர்வு, பழைய கழிப்பறை முறை இல்லாத நகரமாக திருச்சி மாற்றப்படும் என ஏராளமான அறிவிப்புகளை இரண்டு அமைச்சர்களும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர் ஆனால் கூறியது போல எதுவும்  செய்யப்படவில்லை.

K. ராஜேந்திரன்

மாநிலத்தின் மத்திய மாவட்டமான திருச்சி, வளர்ச்சி வேகத்தில் மற்ற மாவட்டங்களை விட பின்தங்கியே உள்ளது. இரண்டு செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தும், எந்த முன்னேற்ற பலனும் கிடைக்காத தமிழக பட்ஜெட் திருச்சி மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே. கடந்த பொது தேர்தலில் கோவை, சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதிக தொகுதிகள் கிடைக்காததால் அங்கு அதிக கவனம் செலுத்தி மக்களை கவர்ந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி நூறு சதவிகிதம் வெற்றியை தந்ததால் அதிக கவனம் தேவையில்லை என்ற மனநிலையில் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் சில செய்திகள் உலா வருகின்றது. அது சரிதான் என்றே தோன்றுகிறது. பலம் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்னும் கருத்து உண்மையானால், திருச்சி மக்கள் தங்கள் தவறை இப்போது உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டியது தான். 

முனைவர் பாலமுருகன்.‌

தமிழக பட்ஜெட் திருச்சி மக்களுக்கு சந்தோஷத்தையும் மனநிம்மதியும் தரக்கூடியதாக இருக்கிறது.‌ மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு திருச்சி பெண்களுக்கு மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பள்ளிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டம் திருச்சி மற்றும் சுற்றுப்புற கிராமப்புறத்தில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதற்கும் கல்வி கற்பதற்கும் ஒரு ஊக்கமாக அமையும். புதிதாக நிலம் வாங்குபவர்களுக்கான பத்திரப்பதிவு இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது, தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில், தமிழகத்தினுடைய பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தும் நிலங்களை வாங்குவது எளிதாகும்.

நடுத்தர மற்றும் உயர்நடுத்தர மக்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகும். இதன் மூலம் நிலத்தில் முதலீடு செய்வது அதிகமாகும். அரசு பணியாளர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் அம்பது லட்சமாக உயர்ந்து இருப்பது திருச்சி அரசு பணியாளர்கள் மத்தியிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குடிமை பணி தேர்வு மற்றும் அரசு பணிக்கு மாணவர்களை தயார் செய்வது போன்றவற்றிற்காக மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வரும் காலத்தில் திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்கள் குடிமைப் பணியிலும் அரசு போட்டி தேர்வில் அதிக அளவில் கலந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட் ஆக இருக்கிறது. 

ஜீசஸ் ராஜா, திருச்சி : அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஆரம்பிக்கும் போது எனக்கு வயது 30, தற்போது 46 வயது ஆகிறது. இந்த இடைப்பட்ட 15 ஆண்டுகளாக எந்த ஒரு அரசு வேலையும் அறிவிப்பு வரவில்லை. இப்போது இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் பல அரசு வேலைகள் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துகின்றனர். ஆனால் தகுதி இருக்கு வயது இல்லை. ஆடு மாடு வாங்க லோன் கேட்டாலும் வயது இல்லை என்கிறார்கள். இவர்களுடையை பட்ஜெட் நல்லதா, கெட்டதா, ஏற்றமா, ஏமாற்றமா என்று நீங்களே கூறுங்கள். இதை அனுகி பார்த்த பிறகுதான் தெரியும். கேட்டவகையில் ஏற்றம் தரும் என்று நம்புகிறேன் என்றார்.

சு சுந்தரமூர்த்தி

முதல்வர் அறிவித்த திருச்சிக்கான ஒலிம்பிக் நகரம் திட்டத்திற்கான நிதி குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை, அதேபோல திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று திருச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு இல்லை, பச்சை மலை சுற்றுலா மேம்பாட்டு திட்டம், மண்ணச்சநல்லூர் அல்லது துறையூர் தொழிற்பேட்டை திருச்சியில் புதிய  தொழில்நுட்ப நகரம், நவல்பட்டு துணைக்கோள் நகரம், திருச்சி முசிறி சாலை விரிவாக்கம், திருச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வளாகம், அரசு போக்குவரத்து கழக திருச்சி கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னை - நாமக்கல் - கரூர் சாலைகளை இணைக்கும் வகையில் மீதமுள்ள அரைவட்ட சுற்றுசாலை திருச்சி மாநகர உட் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், டைட்டில் பார்க்க என  ஏராளமான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்து இருந்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் ஒட்டுமொத்தமாக திருச்சி புறக்கணிக்கப்பட்டது போல உணர்கிறோம் என்றார்.

தமிழக அரசின் பட்ஜெட் திட்டங்களில்  திருச்சி முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் மானிய கோரிக்கையிலாவது தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn