27 ஆண்டுகள் நிறைவுப்பெற்றது- திருச்சி தினம் கொண்டாடப்படுமா?
திருச்சி மாநகராட்சி உதயமாகி 27 ஆண்டுகள்கடந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதியை திருச்சி தினமாக அறிவித்து ஆண்டுதோறும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 8.7.1866இல் திருச்சி நகராட்சி கட்டமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு 1.6.1994 மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் 5,703 வர்த்தகப் பயன்பாட்டு கட்டடங்களுடன் 2 லட்சத்து 33 ஆயிரத்து 947 குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஜூன் 1-இன்று நம் திருச்சி மாநகராட்சி உருவாகி 27வருடம் முடிந்து 28 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் ஜூன் 1 திருச்சி தினமாக அறிவிக்க கோரி ஷைன் திருச்சி அமைப்பினர் சார்பில் மேயர் அன்பழகனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது... நம் அடுத்த தலைமுறைகளுக்கு தெரியும் வண்ணம் நம் திருச்சி மாநகராட்சி திருச்சி தினம் என்று அறிவிக்கவேண்டும்.
மேலும் இந்த திருச்சி தினத்தை கொண்டாட நம் திருச்சி மாநகராட்சியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மேலும் நம் திருச்சியில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களை வைத்து சிறப்பிக்கும் வண்ணம் திருச்சியை பற்றியும் மேலும் திருச்சியை சுற்றி உள்ள சிறப்புமிக்க தலங்கள் பற்றியும் சிறப்பாக எழுத்துப் போட்டி நடனப்போட்டி பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் போன்று நடத்த வேண்டும். மேலும் திருச்சியில் உள்ள மக்களிடம் நம் திருச்சி மாநகரத்தின் சிறப்பினை பற்றி கேட்டு அறிந்து சிறப்பாக இந்த தினத்தை கொண்டாட வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
இதன் மூலம் நம் திருச்சி மாநகரம் திருச்சி தினம் என்று நடத்தி மற்ற மாநகராட்சிக்கு முன் மாநகரமாய் திகழ்வோம். இதற்கு திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றி மேயர் அவர்கள் திருச்சி மாநகராட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறோம். நம் திருச்சி மாநகராட்சி முன் மாநகரமாக விளங்க உதவ காத்திருக்கிறோம்என்று கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மேயர் மாநில அரசிடம் இது குறித்து ஆலோசித்து அடுத்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பின்னர் ஷைன் திருச்சி அமைப்பினருடன் இணைந்து மேயர் அன்பழகன் திருச்சி தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO