பழமையான 5 அடி உயரம் உள்ள சிவகாமி அம்மன் உலோக சிலை மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் பல ஆண்டுகளாக பழமையான உலோக சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் மேல் நடவடிக்கையாக, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி காவல் துறைத் தலைவர் தினகரன் வழிகாட்டுதலின் படி காவல் கண்காணிப்பாளர் ரவி மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில்
காவல் ஆய்வாளர் கவிதா, காவல் உதவி ஆய்வாளர் பாலச்சந்தர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், தலைமை காவலர் கோபால், இரண்டாம் நிலை காவலர் பிரவீன் செல்வம் குமார் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி விற்பனை நிலையத்தை சோதனை செய்ய வேண்டி சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களுக்கு சோதனை செய்ய வேண்டி விண்ணப்பித்து உத்தரவு பெற்றனர்.
அதன்படி (24.12.2022)ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை யாதவ தெருவில் அமைந்துள்ள சரவணன் என்பவரின் வீட்டில் சிறப்பு தனிப்படையினர் சோதனை செய்த போது சுமார் 165 சென்டிமீட்டர் உயரமும் 45 சென்டிமீட்டர் அகலமும் உடைய பிரமாண்டமான சிவகாமி அம்மன் உலோக சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். 5 அடிக்கும் மேல் உயரம் கொண்ட சிலைகளை பொதுவாக வீட்டில் வைத்து வழிபாடும் வழக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதாலும்
மேற்படி சிலையானது பார்ப்பதற்கு தொன்மையான தோற்றத்துடனும் இருந்ததாலும், ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மேற்படி சிலையை வீட்டில் வைத்திருப்பதற்கான உரிய ஆவணம் கேட்டபோது, வீட்டின் உரிமையாளர் சமர்ப்பிக்க தவறியதால் மேற்படி அம்மன் சிலையானது மேல் நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு குற்ற எண். /2022 u.s 41(1) (d), 102 Crpc படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது.
மேற்படி சிலையானது பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது போன்று உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேற்படி சிலையின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பிறகே தெரியவரும். மேற்படி அம்மன் சிலையானது தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சொந்தமானதா என்கிற விவரம் வழக்கின் புலன் விசாரணை முடிவில் தெரியவரும்.
மேற்படி அம்மன் சிலையை மீட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான தனி படையினரை காவல் துறை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO